தேசிய விருது காத்திருக்கிறது: 'சர்வம் தாளமயம்' குறித்து பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல இயக்குனர் வசந்தபாலன், இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்த நெடுமுடி வேணு அவர்களுக்கு தேசிய விருது காத்திருக்கின்றது என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
நேற்று இரவு ஜீவியின் அன்பு அழைப்பின் பேரில் சர்வம் தாள மயம் திரைப்படத்தை காண வாய்ப்பு கிட்டியது. இசை திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம். WHIPLASH என்ற ஆங்கில திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு.குரு சிஷ்ய உறவை மையமாக கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிக கடினமான காரியம். அப்படத்திற்கு கதை எழுத ஆழமான இசையறிவு தேவை.
இசைக்குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் மேனன் அவர்கள் இந்த கதையை மிக அழகாக,ஆழமாக, நுட்பமாக, சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடிவேணு மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார். தேசிய விருது காத்திருக்கிறது. ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார்...
ஜீவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார். அவர் கண்களில் தெறிக்கும் தின்வயது குழப்பம், பதட்டம், தடுமாற்றம், அழுகை, வெறி ,ஏக்கம், காதல், குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார். ஜீவி தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது. வாழ்த்துகள் ஜீவி.......
ஏஆர்ஆர் நம்மை சர்வம் தாளமயம் என்று இந்த உலகை நுண்ணிப்பாய் கேட்க செய்துள்ளார். சற்றே கண்ணை மூடினேன். உலகின் சப்தங்களை இதயத்தால் கேட்க துவங்கினேன். மனசு சொன்னது சர்வம் தாள மயம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments