'பேரன்பு' படத்தை தியேட்டரில் போய் பார்க்க ஆளில்லை, ஏன்? வசந்தபாலன்

  • IndiaGlitz, [Tuesday,February 05 2019]

தமிழ் சினிமாவின் சிம்மசொப்பனாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் உரிமையாளர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. 'பேட்ட', விஸ்வாசம் படங்களும், கடந்த வாரம் வெளிவந்த 'பேரன்பு' உள்பட ஐந்து படங்களும் HD பிரிண்ட்டாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிட்டது.

இதுகுறித்து சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனர் வசந்தபாலன், 'பேரன்பு' திரைப்படத்தை அனைத்து இயக்குனர்களும், அனைத்து ஊடகங்களும் பாராட்டிவிட்டன. ஆனால் அந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்க ஆளில்லை. ஏனெனில் 'பேரன்பு' தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வந்துவிட்டது. ஒரு தெலுங்கு படமோ, ஒரு மலையாள படமோ தமிழ் ராக்கர்ஸில் வருவதில்லை. ஆனால் தமிழ்ப்படம் மட்டுமே வெளியான நாளே வந்துவிடுகிறது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிப்போம் என்று கூறித்தான் விஷால் பதவிக்கு வந்தார். ஆனால் துப்பறிவாளனாகவும், இரும்புத்திரையாகவும் என்னென்னவோ செய்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை, அல்லது கண்டுபிடித்தும் வெளியிடாமல் இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை.

ஏழு பெரிய நடிகர்களின் படங்கள் நன்றாக ஓடி விடுவதால் அவர்கள் இதுகுறித்து வாயை திறப்பதில்லை. எங்களை போல் சிறு படங்கள் எடுக்கும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் பாதிக்கப்படுகிறோம். நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி உதவி செய்வதைவிட அவர்கள் நலிவடையாமல் பார்த்து கொள்ளலாமே! என்று இயக்குனர் வசந்தபாலன் பேசினார்.

வசந்தாபாலனை அடுத்து பேச வந்த இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது: வசந்த பாலன், என் தம்பி துப்பறிவாளன் பத்தி பேசினார். அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் நான் பேசுவேன். நாலு மாசம் இரவும் பகலுமாக தமிழ் ராக்கர்ஸை பிடிக்க வேல செஞ்சோம் சார். நான் சத்தியமா பார்த்தேன் சார். அவருக்கும் (விஷாலுக்கும்) அதுதான் ஆசையும். ஆனா, கண்டுபிடிக்க முடியவில்லை. திருடர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது இயற்கை அவன் பிழைப்புக்கு அவன் பண்றான்’’ என்று கூறினார்.