எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்.. பிரபல கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் தங்கர்பச்சான்..!
- IndiaGlitz, [Friday,March 22 2024]
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிமுக, திமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் எதிர்பாராத ட்விஸ்ட்டாக கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கர்பச்சான் தேர்தலில் போட்டியிடப் போவதாக எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில் திடீரென அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளது பாமக தொண்டர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் தங்கர்பச்சான் கடந்த 2002ஆம் ஆண்டு ’அழகி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு ’சொல்ல மறந்த கதை’ ’தென்றல்’ ’பள்ளிக்கூடம்’ கடந்த ஆண்டு வெளியான ’கருமேகங்கள் கலைகின்றன’ உள்பட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார். மேலும் அவர் ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பதும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளங்களில் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் திரையுலகில் பல சாதனைகள் செய்த தங்கர்பச்சான் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவர் வெற்றி பெற்றால் மண்ணின் மைந்தரான அவர் கடலூர் தொகுதி மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.