சென்னை காவல்துறை ஆணையரிடம் தங்கர்பச்சான் புகார்: என்ன காரணம்?
- IndiaGlitz, [Wednesday,July 07 2021]
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் சற்று முன்னர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் என்ற புதிய மசோதாவை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்கும் காலம் கடந்த 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு நடிகர் சூர்யா உள்பட திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும், இதனை அடுத்து சமீபத்தில் திரையுலக பிரதிநிதிகள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வலியுறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று மத்திய அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை இயக்குனர் தங்கர்பச்சான் ஆதரிப்பதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை நான் ஆதரிக்கவில்லை என்றும் நான் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு சட்டத்தை நான் ஆதரிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்றும் நான் அந்த சட்டத்தை ஆதரிக்க வில்லை என்றும் கூறிய தங்கர்பச்சான் சமூக வலைதளங்களில் என் பெயரில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது சென்னை காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.