மறைந்த இயக்குனர் தாமிரா மகனுக்கு எழுதிய கடைசி கடிதம்:
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த கடிதம் அவரது மகனுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு தகப்பனின் மகனுக்கும் உரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அண்ணன் இயக்குனர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்..
எல்லா பிள்ளைகளும் படிக்க வேண்டிய கடிதம்..
------
அன்பு மகனே...!
அரசியல் சூது நிறைந்த…இந்த தேசத்தில்..,
உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான்
இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது...!
உன்னுள்ளிருக்கும்
அன்பையும்,அறத்தையும்
காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது....
இந்தக் காலம்.
என் போன்ற தந்தைகளெல்லாம்,
தன் மக்களை
தற்கொலைக்குத் தப்பிய உயிராக பார்ப்பது
எத்தனை வன் கொடுமை...!
இப்போதுதான்
நீ உறுதியான நம்பிக்கையுடனும்,தெளிவுடனும்
இருக்க வேண்டும்.. மகனே...!
அவர்கள் என் நிகழ்காலத்தையும்...
உன் எதிர்காலத்தையும்
நசுக்கும் வன்மத்துடன்
காய் நகர்த்துகிறார்கள்.
இந்த சதுரங்க ஆட்டத்தில்
எண்ணிக்கையில் நமக்கு பலம் அதிகம்..
ஆனால் மகனே…!
ஒற்றுமையிலும், அதிகாரத்திலும்
அவர்களது கை ஓங்கி நிற்கிறது.
ஆட்டத்தின் விதி முறைகள்
நமக்கு மட்டும் தான்...!
அவர்கள்
எத்தனைக் கட்டம் வேண்டுமானாலும்
தாண்டி வருவார்கள்.
நம்மை வீழ்த்துதல் மட்டுமே
அவர்களது நோக்கம்...!
இங்கே வெற்றி கொள்தலை விட
நம்மை தக்க வைத்துக் கொள்தலே..முக்கியம்.
உயிர் ஆயுதம் என்ற சொல்லை
சற்று ஒதுக்கி வை மகனே...!
உனது தூக்குக் கயிற்றை
உன் கையில் கொடுத்திருக்கிறார்களே…!
அதுதான் அவர்களது சூழ்ச்சி..
நீ அதை பயன்படுத்தினால்
அவர்களுக்குத்தான் வெற்றி..!
உன் மரணத்தால்
அவர்களை வெற்றி கொள்ளச் செய்யாதே...!
அதிகாரம் என்பது சுற்றப்பட்ட பம்பரக் கயிறு...!
ஆட்சி என்பது சுழல்கின்ற பம்பரம்..!
சுழலும் ஆட்சிப் பம்பரம்
ஓர் நாள் வீழ்ந்தே தீரும்..!
காலமெலாம் சுழல்வதற்கு
இது சனாதனம் அல்ல
ஜனநாயகம்...!
சோர்ந்து போகாதே மகனே...!
சற்று பொறு..
ஒன்றுபடு...!
நாம் இணைந்து நின்றால்
நம் மூச்சுக்காற்றில்
அணைந்து விடக் கூடியதுதான்
அவர்களது அதிகார வெளிச்சம்..!
இது தமிழ் நிலம்
நாம் தமிழ் இனம்..
இது தவிர்த்து நம்மில்
எந்த பேதமுமில்லை..
சாதியாகவோ மதமாகவோ
யாரையும் விலக்கி வைக்காதே மகனே...!
குறிப்பாக
சங்கிகளென யாரையும் இகழாதே.. விலக்காதே...!
அவர்கள்
தங்கள் கழுத்திற்கு வரும் குறு வாளை
அணிகலன் என எண்ணி மகிழும் அப்பாவிகள்...!
தனக்காக கண்ணீர் சிந்தும்
முதலைகளை
நம்பும் ஆடுகள்...!
நீ எதை இழக்கிறாயோ?
அதைத்தான்
அவர்களும் இழக்கிறார்கள்..
உனக்கு என்ன துரோகம் இழைக்கப்படுகிறதோ?
அதே துரோகம் தான்
அவர்களுக்கும் இழைக்கப்படுகிறது.
கடவுள் என்கிற
ஒரு மந்திரச் சொல்லை உபயோகித்து
அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள்.
ஜிடிபி குறைகிறதா?
ஒரு கடவுளை சுழற்றிப் போடு..
கல்வியைக் களவாட வேண்டுமா?
மற்றொரு கடவுளை சுழற்றிப் போடு.
எதற்கும் சிக்கவில்லையென்றால்
தேசபக்தியைத் திருப்பிப் போடு.
அவர்களது ஆட்டத்தில்
கடவுளும் தேசபக்தியும்
ஒரு பகடைக் காய்….!
நமக்குத்தான்
விநாயகன், முருகன் ,
ராமர், யேசு, அல்லா….
அவர்களுக்கு கார்ப்பரேட்தான் கடவுள்.
நம் வளங்களைக்
கொள்ளை கொள்தல்தான் நோக்கம்.
நமது பண்பாடுகளையும்
பழக்க வழக்கங்களையும்
அரித்தெடுக்க போடப்பட்டிருக்கிறது.
அவர்களது மடிவலை..!
கடவுளைத் திருடுவதிலிருந்து
காய்கறிகளை மலடாக்குவதுவரை
யாவற்றையும் கவனத்துடன் செய்கிறார்கள்..!
இப்போது
கல்வியை நோக்கி நீண்டிருக்கிறது
அவர்களது ஆயுதம்.
தகுதிப்படுத்துகிறோம் என
சொம்படிப்பார்கள் மகனே
நம்பி விடாதே...!
நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல..!
ஆழத்தோண்டி தேடி எடுக்கும்
நம் பண்டைய வரலாற்றில்
திமிறித்திமிறி மேலெழுகிறது
நமது அறிவும், நாகரீகமும்,கட்டுமானமும்...!
அங்கு
அவர்களது கடவுளர் இல்லை.
இந்தத் தரவொன்று போதும் மகனே...!
பிறப்பில் இழிவில்லை
நாம் எவனுக்கும் அடிமையில்லை...
பதட்டம் கொள்ளாதே
பசப்பு வார்த்தைகளில்
ஒருபோதும் மயங்காதே…
எதிரிகளின் இலக்குகளை
கவனத்தில் கொள்..
அதை
அருகிருக்கும் சகோதரனை உணரச் செய்.
ஒன்றுபடுதலும்
உறுதி கொள்ளலும் தான்
இப்போதையத் தேவை
.
அந்த விற்பனைச் சந்தை
துவங்கி விட்டது.
வியாபாரமும்
நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வேடிக்கை பார்க்கும்
மனிதர்களாக இருக்கிறோம்.
நம்மில் அந்த வியாபாரத்திற்கு
முட்டுக் கொடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
முற்று முதலாக விற்றுத் தீர்ந்தபின்..
அதை மீட்டெடுக்கும் போர்
உன் கைவசப்படலாம்..
நீ
சுழியத்திலிருந்து துவங்க நேரலாம்.
எதற்கும் கவலை கொள்ளாதே மகனே..
சுழியத்திலிருந்து துவங்கி வென்றெடுக்கலாம்.
உலகிற்கே சுழியத்தை கற்றுத் தந்தவர்கள் நாம்.
அச்சம் கொள்ளாதே...!
இந்தப் போருக்கு வேர் எது என கண்டுணர்..
மூலம் அறி
அதை வேரோடு அழி
இத்தனைக்கும் காரணம்
ஒரு நூலிழைத் தவறுதான்..
சில நூற்றாண்டுகளாய் தொடர்கிறது....
அறுத்தெறிவது அத்தனை கடினமில்லை
அத்தனை எளிதுமில்ல.....
இனி யாவும் உன்கையில்
தலைமுறைத்தவறை
சீர் செய்யும் பொறுப்பு
உன்னிடம் இருக்கிறது..
உறுதியாய் நின்று போராடு..
உயிர் தொலைக்காமல் களமாடு....!
- தாமிரா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout