சுசீந்திரனின் அடுத்த படத்தின் டைட்டில் மாற்றம் ஏன்? அவரே கொடுத்த விளக்கம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கியுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன், நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால் உள்பட பல திரைப்படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ’ஈஸ்வரன்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படத்திற்கு ’சிவ சிவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டைட்டில் தற்போது மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜெய் நடிப்பில் ’சிவ சிவா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த திரைப்படத்தை பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக்குழுவினர்களின் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள். இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் ’சிவ சிவா’ திரைப்படத்திற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் இன்னும் இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய ஆலோசனையில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர் அவர்களின் சம்மதத்துடன் என் உதவியாளர்களுடன் ஆலோசித்து ’சிவ சிவா’ என்ற தலைப்பை மாற்றி ’வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.