ஹீரோவை திருப்திபடுத்த தயாரிப்பாளரை அழிப்பதா? பிரபல இயக்குனர் காட்டம்
- IndiaGlitz, [Friday,November 08 2019]
மாஸ் நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள், அந்த படத்திற்கு தேவைக்கும் அதிகமாக செலவு செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு போட பணமே திரும்ப வருவதில்லை என்ற நிலை திரையுலகில் இருந்து வருகிறது. ஒரு மாஸ் நடிகரின் படம் ரூ.100 கோடி, ரூ.200 கோடி வசூல் என செய்தி வெளிவந்தாலும், அந்த படத்தின் தயாரிப்பாளர் காணாமல் போகும் நிலை தான் ஏற்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் சுந்தர் சி பேட்டி ஒன்றில் கூறியதாவது:
பல இயக்குனர்கள் பெரிய ஹீரோவை கமிட் செய்து விட்டு, அவர்களை வைத்து படம் எடுக்கும் போது, ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். பெரிய பட்ஜெட், 2000 பேரை வைத்து பிரம்மாண்டமான ஷார்ட், ஒரு ஷாட்டை ஒரு நாள் முழுவதும் எடுப்பது என ஹீரோவை இம்ப்ரஸ் செய்வதில் மட்டுமே இயக்குனர்கள் குறியாக இருக்கின்றனர். பணம் செலவு செய்யும் தயாரிப்பாளர் குறித்து அவர்கள் யோசிப்பதில்லை.
மேலும் ஹீரோ கை காட்டுபவர் தான் இயக்குனர் என்ற நிலை ஆகிவிட்டதால் அவர்கள் ஹீரோவைத் உற்சாகப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. ஹீரோயிசம், பாடல், சண்டைக்காட்சி, பில்டப் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், ஹீரோ எப்படி புகழலாம்? என்பதிலேயே இயக்குனர்களின் கவனம் உள்ளது. இதனால்தான் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் தான் பிள்ளையார் சுழியும், அவரை ஏமாற்றினால் எப்படி?
மேலும் ஒரு திரைப்படத்திற்கு அதில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமே 80% செலவு செய்யும்போது அந்த திரைப்படத்தில் எப்படி குவாலிட்டி காண்பிக்க முடியும்? இது முழுக்க முழுக்க ஆடியன்ஸ்களை ஏமாற்றும் வேலைதான். பெரிய சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு செலவு செய்துவிட்டு தயாரிப்பாளர்களை அழிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. ஆடியன்ஸ்களுக்கு கொடுத்த காசுக்கு பிரம்மாண்டம் வரவேண்டும், அதே சமயத்தில் தயாரிப்பாளருக்கு குறைந்தபட்ச லாபமாவது நிற்க வேண்டும், இரண்டும் முக்கியம் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியுள்ளார்.