வெற்றி இயக்குனர் எஸ்பி முத்துராமன். பிறந்த நாள் பகிர்வு
- IndiaGlitz, [Friday,April 07 2017]
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நடிகர்களின் பல படங்களை இயக்கி கோலிவுட்டில் வெற்றி இயக்குனராக திகழ்ந்த எஸ்பி முத்துராமன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கோலிவுட் திரையுலகமே இந்த சாதனையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
1935ஆம் ஆண்டு காரைக்குடி செட்டிநாடு குடும்பத்தில் பிறந்த எஸ்பி முத்துராமன், கடந்த 1972ஆம் ஆண்டு ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த 'கனிமுத்து பாப்பா' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.
கடந்த 1977ஆம் ஆண்டு வெளிவந்த 'புவனா ஒரு கேள்விக்குறி' படம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கிய முதல் படம். அதன் பின்னர் ப்ரியா, ஆறில் இருந்து அறுபதுவரை, நேற்றிக்கண், புதுக்கவிதை, போக்கிரி ராஜா, ஸ்ரீராகவேந்தர், ராணுவ வீரன், குரு சிஷ்யன், வேலைக்காரன், பாண்டியன், தர்மத்தின் தலைவன் உள்பட 25 படங்கள் ரஜினியை வைத்து மட்டும் இயக்கியுள்ளார்.
அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்', தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், உயர்ந்த உள்ளம், ஜப்பானில் கல்யாணராமன், போன்ற படங்களை இயக்கியுள்ளார். எஸ்பி முத்துராமன் இயக்கிய கமல், ரஜினி படங்கள் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிறந்த நாளில் அவர் நீண்டகாலம் வாழ்ந்து இளையதலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.