எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுக தொண்டனாக இருப்பேன்: பிரபல இயக்குனர் அறிக்கை
- IndiaGlitz, [Sunday,June 07 2020]
'இங்கிலீஷ்காரன்', 'மகாநடிகன்', 'சார்லி சாப்ளின்' உட்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ள பிரபல திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தற்போது யோகிபாபு நடிக்கும் 'பேய்மாமா' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவர் 2015ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைமை கழக நட்சத்திர பேச்சாளராக அங்கீகாரம் பெற்று, தமிழகமெங்கும் 200க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் தேர்தல் பிராச்சாரத்தில் ஈடுபட்டு, ஜெ.ஜெயலலிதாவின் பாராட்டுதல்களையும், நன் மதிப்பையும் பெற்றிருந்தார். அவரது பேச்சில் நக்கல், நையாண்டி, நகைச்சுவை கலந்திருக்கும், அது அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.
இந்த நிலையில் சமீபத்தில் 'பாரதிய ஜனதா கட்சி'யை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, 'திரு.ஷக்தி சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டாரோ?' என்ற தவறான தகவலை பரப்பும் வண்ணம் அமைந்தது. இது சம்பந்தமாக, ஷக்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியானது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் முற்றிலும் தவறானது. நான் 'பேய்மாமா' பட ஷூட்டிங்கிற்காக கேரளாவில் சில மாதங்கள் தங்கியிருந்த காரணத்தால் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடு *கொரோனா வைரஸ் தொற்று' தடைக் காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டதாலும் எனது மறுப்பு அறிக்கையை வெளியிட தாமதமானது.
நான் புரட்சி தலைவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கரங்களால் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்று, இன்றைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு துணைமுதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, 'எனது உயிர் மூச்சு இருக்கும் வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனாகவே தொடர்ந்து பணியாற்றுவேன்' என்ற நிலைப்பாட்டை இதன் மூலம் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.