நான் அன்புச்செழியனின் சாதிக்காரன் இல்லை: சீனுராமசாமி
- IndiaGlitz, [Sunday,November 26 2017]
சசிகுமார் உறவினர் அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய மரணத்திற்கு காரணமான அன்புச்செழியனை போலீஸாரின் தனிப்படைகள் தேடி வருகின்றன. ஆனால் திரையுலகில் இந்த விஷயம் குறித்து பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவு அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. குறிப்பாக இயக்குனர் சீனுராமசாமி, நடிகர் விஜய் ஆண்டனி போன்றவர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஒரு உயிரை இழந்து ஒரு குடும்பமே நிற்கதியில் இருக்கும் நிலையில் அந்த மரணத்திற்கு காரணமானவருக்கு ஆதரவு கொடுப்பது சரியா? என்று திரையுலகமே கொந்தளித்துள்ளது. இந்த நிலையில் சீனுராம்சாமி சற்றுமுன்னர் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவதூ:
நெஞ்சம் நிறைந்த நண்பர்களுக்கு வணக்கம். பார்த்து பேசி ஒரு படம் எங்கள் கம்பெனி தயாரிப்பில் செய்யுங்கள் என்று வாக்குறுதியும் நம்பிக்கையும் தந்த அன்பர் திரு அசோக்குமாரின் துக்ககரமான முடிவு நெஞ்சடைத்து நான் உணர்ந்தேன். என் குடும்பத்தில் இதுபோன்ற இழப்புண்டு, இதற்கு ஆறுதல் எல்லாம் சொல்ல முடியாது. நினைவில், கனவில் வந்து நிற்பர்
நான் திரு.அன்புச்செழியனின் சாதிக்காரன் இல்லை, வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவன் இல்லை, ஏன் நடிகர்களின் தேதியை பெற்று ஃபர்ஸ்ட் காப்பி கூட எடுக்கும் எண்ணமும் இல்லை. சம்பளத்திற்கு மட்டும் படம் இயக்க வேண்டும் என்று நினைப்பவன். 70 வருட சினிமா, பைனான்சியர்கள் தான் இயக்கி உள்ளனர். அரசு லோன் கிடையாது. சினிமாக்காரனுக்கு வீடு கூட கிடைக்காது.
ஒருமுறை விமான நிலையத்தில் செழியன் சிரித்து கொண்டே 20 கோடி பேலன்ஸ் அவர் தரணும், இவர் 30 கோடிண்ணே, டீ சாப்புடுறீங்களா? என்றார். அவ்வளவுதான் எனக்கு அவரை புரியும். மூன்று பைசா வட்டிக்கு தருவாராம். எங்கள் சங்கங்கள் தலையிட்டு சில நிபநதனைகள் இட வேண்டும். அதிக பணம் பெறுதல் தேவைக்கதிகமாக வட்டியும் கட்டுதல் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்
வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில் உழைப்பாளி அசோக்கின் பிரிவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்