ஜோதிகா ஏன் அப்படி பேசினார்? விளக்கம் அளிக்கும் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக இணையதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து சசிகுமாருடன் ஜோதிகா நடித்து வரும் படத்தை இயக்கி வரும் இரா.சரவணன் என்பவர் விளக்கமளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம்.
ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா? என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான்.
ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது? சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா?
ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம்.
அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்...” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார்.
இந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். “சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்...” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது!
இவ்வாறு இயக்குனர் இரா.சரவணன், விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து ஜோதிகா குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் அப்படிப் பேசினார் ஜோதிகா? இதுதான் உண்மையான பின்னணி... pic.twitter.com/mdXiNY8lPb
— இரா.சரவணன் (@erasaravanan) April 23, 2020
ஜோதிகா தவறாக எதுவும் கூறவில்லை.கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தாருங்கள் என்கிறார்.உண்மைதானே, இன்று புகழ்பெற்ற கோயில்,மசூதி,சர்ச் ஆகியவற்றின் நிலை என்ன? எல்லாவற்றிலும் ஒரே பூட்டுதான்.தற்காலிக மக்கள் தங்கும் கல்வி நிலையங்கள்,மருத்துவமனைகளே கோவில்,
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) April 22, 2020
மருத்துவரே கடவுள்?? pic.twitter.com/hOyQ3z3UV6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments