'கோ 2' ஆதரிக்கும் கட்சி எது? விளக்குகிறார் இயக்குனர் சரத்
- IndiaGlitz, [Wednesday,May 11 2016]
தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரியான 3 நாட்களுக்கு முன்னர் அதாவது மே 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரசியல் படம் 'கோ 2' தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் கதையே முதலமைச்சரை நாயகன் கடத்துவதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் இந்த படம் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்கும் வகையில் உள்ளதா? என்ற சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் சரத்.
இதுகுறித்து சரத் கூறியதாவது: "நான் எந்தக் கட்சியையும், எந்த தனிப்பட்ட நபர் சார்பாகவும் இந்த படத்தை எடுக்கவில்லை. அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் இந்தப் படம். முதல்வர் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். முதல்வர் பொறுப்பு என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை மக்கள் உணரும்படி அந்த பாத்திரத்தை அமைத்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தை அடுத்து சரத் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் பாபிசிம்ஹாதான் நாயகன் என்றும், அதில் பாபிசிம்ஹா போலீஸ் கேரக்டரிலும் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.