கொரோனா பாதித்தவர்கள் நியூஸ் பார்க்க வேண்டாம்: கொரோனாவில் இருந்து மீண்ட இயக்குனரின் பதிவு!
- IndiaGlitz, [Tuesday,May 11 2021]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ’அயலான்’ பட இயக்குனர் ரவிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக கொரோனா கால தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது.
அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நோய் தொற்ற ஆரம்பித்த 7 நாட்கள் மிக முக்கியமான நாட்கள், அதற்குள் மருந்துகள் எடுத்துக்கெள்வது அவசியம்.
காலதாமதம் செய்வதும் “எனக்கு வராது அதெல்லாம் ஒன்னும் இல்லை” “டெஸ்ட் பண்ணுனா கொரோனான்னு சொல்லிடுவாங்க” இப்படியாக அலட்சியமாக பரிசோதனையை தள்ளிபோடுவதும் நோய் உடலுக்குள் வீரியமடையவே உதவிசெய்யும். மிகுந்த விழிப்புணர்வோடு நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும்.
நோய் தொற்றுக்கு ஆளான பிறகு பேஸ்புக் மற்றும் செய்திகள் வாயிலாக இறந்தவர்கள் பற்றிய நியூஸ் கேட்க கேட்க மனபதற்றம் ஏற்படுகிறது. துளியும் தூக்கம் வரவில்லை. அதுவும் நம் மனநிலைமையை பாதிக்கிறது. நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு நியூஸ் பார்க்காமல் இருப்பது நல்லது.
உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும் நிறைய தொற்று ஏற்பட்டுள்ளது. அன்பானவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான், சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தாமதம் செய்யாமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். மீண்டு வருவோம்.
இவ்வாறு இயக்குனர் ரவிகுமார் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.