தி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சர்ச்சையை சம்பாதித்த இரட்டையர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “தி ஃபேமிலி மேன் 2” வெப் தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையிலும் இந்தத் தொடரின் இயக்குநர் யார் என்பது பற்றிய அலசல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு “தி ஃபேமிலி மேன் 1“ தொடர் வெளியானபோது ரசிகர்களிடையே எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை. அப்போது இந்த தொடரின் மூலம் அதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே எனும் இரட்டை இயக்குநர்களுக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த இரு இயக்குநர்களும் சகோதரர்களாக இல்லாவிட்டாலும் சினிமா பற்றி ஒரே மாதிரியான கனவுகளை கண்டதால் பாலிவுட் மட்டும் அல்லாது தற்போது இந்திய சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தைக் கெட்டியாகப் பிடித்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
ராஜ் மற்றும் டி.கே எனும் இருவரும் இதற்கு முன்பு இந்தியில் பல சினிமாக்களை உருவாக்கி உள்ளனர். ஆனால் இவர்களுக்குப் பூர்வீகம் என்பது தமிழகத்தை ஒட்டிய திருப்பதி மற்றும் சித்தூர். பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் சினிமா கனவுகளோடு வளர்ந்தாலும் அமெரிக்காவில் ஒன்றாக வேலைப்பார்த்த ஐடி துறையினர். பின்னர் ஓயாத சினிமா கனவுகளால் இந்த இரு இளைஞர்களும் முதன் முதலாக பாலிவுட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு “99” என்ற படத்தை இயக்கினர். அடுத்து “ஷோர் இன் தி சிட்டி”. இந்த இரு திரைப்படங்களும் பாலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. காரணம் அதன் தனித்துவமான கதையமைப்பு.
இப்படி பெற்ற வெற்றிகளுக்கு இடையே பல திரைப்படங்களுக்கு கதாசிரியர்களாவும் இவர்கள் பணியாற்றினர். பின்னர் D2R எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினர். இந்த நிறுவனத்தில் இருந்து வெளியான “சினிமா பாண்டி” திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இவர்களது இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு “ஃபேமிலி மேன்” வெப் தொடர் வெளியாகிறது. இதனால் ராஜ் மற்றும் டி.கே இருவரும் பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை இயக்குநர்களாக அறியப்படுகின்றனர்.
அந்த வகையில் தற்போது “தி ஃபேமிலி மேன்2” வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்தத் தொடரில் ஈழத் தமிழர்களின் சித்தரிப்பு குறித்த சர்ச்சை தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சர்ச்சையை தவிர்த்து இருந்தால் பாலிவுட்டில் மட்டும் அல்லாது தென்னிந்தியாவிலும் இந்த இரட்டை இயக்குநர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கும் எனப் பல விமர்சகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
மேலும் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் தற்போது ஷாகித் கபூர் நடிப்பில் புதிய வெப் தொடர் ஒன்று உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். கொரோனாவிற்கு இடையில் பல பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் தற்போது ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரட்டை இயக்குநர்கள் இருவரும் வெப் தொடர்கள் மூலமாக ஓடிடி தளத்தை ஆக்கிரமித்து நம்பிக்கை இயக்குநர்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments