யூடியூப் விமர்சகர்களுக்கு பிரபல இயக்குனர் எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,February 15 2019]
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு திரைப்படம் வெளியாகும்போது அந்த படத்தை ஒருசில முன்னணி பத்திரிகைகள் மட்டுமே விமர்சனம் செய்து வந்தன. ஆனால் தற்போது யூடியூபில் நூற்றுக்கணக்கான விமர்சன சேனல்கள் வந்துவிட்டது. முதல் காட்சி முடிந்த ஒருசில நிமிடங்களில் யூடியூபில் விமர்சனம் வந்து அந்த படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாகி வருகிறது
இந்த நிலையில் 'கோணலா இருந்தாலும் என்னோடது' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு யூடியூப் விமர்சகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது:
ஒரு திரைப்படத்தை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். நாங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதே நேரத்தில் விமர்சகர்கள் படத்தை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். படத்தில் பணிபுரிந்த கலைஞர்களையும் டெக்னீஷியன்களையும் தயாரிப்பாளர்களையும் தனிப்பட்ட முறையிலும் ஒருமையிலும் விமர்சனம் செய்வதை இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது.
ஒரு படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார் என்பது சினிமாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் விமர்சனம் செய்பவர்களுக்கு அது தெரியாது. எனவே விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து மனசாட்சியுடன் விமர்சனம் செய்யுங்கள் என்று இயக்குனர் பேரரசு கேட்டுக்கொண்டுள்ளார்.