'சூர்யா 40' படத்தை இந்த படத்துடன் ஒப்பிட்ட இயக்குனர் பாண்டிராஜ்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் ’சூர்யா 40’. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் நடித்து வரும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய இயக்குனர் பாண்டிராஜ் கார்த்தி ரசிகர்களுக்கு ’கடைக்குட்டி சிங்கம்’ எப்படி ஒரு சிறந்த படமாக இருந்ததோ அதே போல் சூர்யா ரசிகர்களுக்கு ’சூர்யா 40’ திரைப்படம் மிகச் சிறந்த படமாக அமையும். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.