நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம்: நீட் மரணம் குறித்து பா ரஞ்சித்

கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் நீட் தேர்வை எழுதிவிட்டு வந்த அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி என்பவரும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு முன்பும், நீட் தேர்வுக்கு பின்பும் என இரண்டு மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருவோம் என்று கூறிய திமுக அரசு அதுகுறித்த ஆயத்த பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட்தேர்வு மரணம் குறித்து பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது:

நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்கம் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.