'ஒருநாள் கூத்து' எதை குறிக்கின்றது. இயக்குனர் நெல்சன் விளக்கம்
- IndiaGlitz, [Saturday,June 04 2016]
அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள 'ஒருநாள் கூத்து' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் நெல்சன் இந்த படம் குறித்தும், 'ஒருநாள் கூத்து' என்பது எதை குறிக்கின்றது என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். ஆனால் இந்த ஒருநாள் கூத்தில் ஏற்படும் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதே இந்த படம்.
இந்த படம் யதார்த்தமான, கலகலப்பான, திருமணம் சார்ந்த கதை. ஒவ்வொரு திருமணத்துக்கான ஓட்டமும் திருமணம் முடிந்ததும் நின்று விடுகிறது. திருமணம் இப்போதெல்லாம் சில சூழல்களில் ஒரு திணிப்பாகவும், நிர்ப்பந்தமாகவும், வன்முறையாகவும் மாறி வருகிறது. திருமணத்துக்குப் பிந்தைய தருணங்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வேலை இறுதியாகத் திருமணம், அத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவது போல் கருதுகிறார்கள். இந்த படம் திருமணம் சார்ந்த சில கேள்விகளை எழுப்பி, நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும்” என்று இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.
தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.