கோவிலுக்கு போகாதீர்கள் என சொன்னது ஏன்? இயக்குனர் மிஷ்கின் விளக்கம்.
- IndiaGlitz, [Tuesday,May 14 2024]
கோவிலுக்கு செல்லாதீர்கள் என தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்
இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் மற்றும் கனிஷ்கா நடிக்கும் ’ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது:
இதற்கு முன்பு ஒரு மேடையில் சினிமாவுக்கு போங்க, கோவிலுக்கு கோவிலுக்கு போகாதீர்கள் என்று சொன்னதை ஒரு பெரிய சர்ச்சையாக மாற்றி விட்டார்கள். கோவில் என்பதே நான் சர்ச், மசூதி, கோவில் என்று எல்லாவற்றையும் சேர்த்து தான் சொன்னேன்.
நான் பிறந்தது ஒரு இந்து குடும்பம், வளர்ந்தது ஒரு முஸ்லிம் குடும்பம், என்னுடைய மனைவி ஒரு கிறிஸ்டியன். நான் ஏன் கோவிலுக்கு போக வேண்டாம் என்று கூறினேன் என்றால் கோவிலுக்கு காலையிலேயே சென்று விடுகிறீர்கள். காலையில் எழுந்தவுடன் அம்மாவை பார்க்கிறோம், அப்பாவை பார்க்கிறோம், உறவினர்களை பார்க்கிறோம், அவர்கள் தான் கோவில்.
நான் ஏன் தியேட்டருக்கு போக வேண்டும் என்று சொன்னேன் என்றால், இன்று தியேட்டர் வெறிச்சோடி கிடக்கிறது, இது நிஜம். எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மொபைலுக்குள், ஒரு ரிமோட் கண்ட்ரோலுக்குள், ஒரு வினாடிக்கு 30 சேனலை மாற்றக்கூடிய அளவுக்கு வந்து விட்டது. இதனால் நாம் தியேட்டரை மறந்து விட்டோம். அதனால் தான் நான் தியேட்டருக்கு செல்லுங்கள் என்று சொன்னேன்.
ஒருவேளை தெரியாமல், நீங்கள் தவறாக அர்த்தம் செய்யும் வகையில் பேசியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று இயக்குனர் மிஷ்கின் பேசினார்.