முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்: மிஷ்கின்

ஒரு இயக்குனருக்கு முதல் படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த இயக்குனருக்கு பைத்தியம் பிடித்து விடும் என ’செல்பி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் உருவான ’செல்பி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கின், கலைப்புலி தாணு, வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மிஷ்கின், ‘முதல் படம் ஒரு இயக்குனருக்கு வெற்றி அடைந்துவிட்டால் அந்த இயக்குனருக்கு பைத்தியம் பிடித்து விடும் என்றும் இரண்டாவது படத்தில் உலகையே மாற்ற வேண்டும் என்றும் எண்ணுவார் என்றும் நானும் அதே போல் தான் இருந்தேன் என்றும் கூறினார்

மேலும் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்றும் நெகட்டிவான விஷயங்களை பேசக்கூடாது என்றும் நல்ல விஷயங்களை மட்டும் பேசினால் வெற்றி நம்மை அழைத்துச் செல்லும் என்றும் அதற்கு சரியான உதாரணம் வெற்றிமாறன் தான் என்றும் கூறினார். வெற்றிமாறன் ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் உள்ள நல்லவை பற்றியே பேசுவார், சிந்திப்பார் என்றும் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த செல்பி இயக்குனர் மதிமாறனும் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன், வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், சுப்பிரமணியன் சிவா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.