அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை: அறிமுக இயக்குனர் ஆவேசம்

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

அறிமுக இயக்குனர் மங்களேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மரகதகாடு'. முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இயக்குனர் மங்களேஷ்வரன் தற்போது பேசப்பட்டு வரும் 8 வழி பசுமை சாலை குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது: வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே மரகதகாடு படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றி தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.

ஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும். இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள் தான் அமைய இருக்கிறது.

காடுகளை ஒட்டி நகரங்களும் சாலைகளும் உருவாகும்போது யானைகளும் வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும். ஒன்றை அழித்து இன்னொன்று வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல. இருப்பதை அழித்துவிட்டு அதன் மேல் புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நாட்டின் வளர்ச்சி என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும்.

சாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை. இயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது. ஆள்பவர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கான நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை. ஒரு திட்டத்தால் யாருக்கு எவ்வளவு வருமானம் என்ற வியாபாரம் நோக்கம் சார்ந்து செயல்படக்கூடாது. அரசாங்கம் இயற்கையை வணிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாகத்தான் விளை நிலங்களில் கூட தொழிற்சாலை கட்ட கிளம்பி வருகிறார்கள்.

அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்களின் பை நிரம்பினால் போதும், மக்களின் சுவாசப்பை என்ன ஆனால் என்ன? என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் மாறிவருகிறது.. தண்ணீர் வருகின்ற கிணற்றை மூடிவிட்டு உனக்கு வாட்டர் பாக்கட் தருகிறேன் என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ அப்படிதான் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியும். இதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக காட்டுகிறது. இயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிந்திருக்கிறது..

உலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்? என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை மரகதக்காடு படத்தில் பதிவு செய்துளேன். காட்டை அழித்து மலையைத் தகர்த்து பூமிக்கு அடியில் உள்ள மரகதத்தை தேடாதீர்கள். நம் கண்களுக்கு முன்னால் தெரியும் ஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான். மரக்கத்தக்காடு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தானும் ஒவ்வொரு மரமாவது வைக்கவேண்டும். வீடு என் சொத்து.. மரம் நாட்டுக்கு சொத்து என்கின்ற உணர்வை இந்த படம் நிச்சயம் ஏற்படுத்தும். தண்ணீரை விற்க ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தோம்..

இன்று வீடு தோறும் தண்ணீர் கேண்கள். அடுத்ததாக, சென்னையில காற்று விற்பனைக்கு வந்திருக்கு. 6 லிட்டர் ஆக்ஸிஜன் 645 ரூ. பிளிப்கார்டில் விற்கிறாங்க. இப்பவும் கோபம் வரலைன்னா..வரும் தலைமுறை நம்மை மன்னிக்காது. அதுமட்டுமல்ல இருக்கிற காட்டை, யார் அழித்தாலும் கோபம் வரணும்.. அந்த தார்மீகக் கோபத்தை என் படம் உருவாக்கும்.

ஒரு அரசாங்கத்தின் ஆயுள் 5 வருடம்தான். ஆனால் அவர்கள் நாம் சிறுபிள்ளையிலிருந்து பார்த்து பேணிவரும் வளங்களை எடுக்கும்போது.. மக்களதிகாரத்திற்குட்பட்டே வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். அங்குள்ள எந்த மக்களும் 8 வழிச்சாலைக்காக தவம் இருக்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவே ஓலமிடுகிறார்கள். வளத்தை தக்கவைத்துக்கொள்ளவே போராடுகிறார்கள். அதை அடக்கு முறையால் செயல்படுத்தத் துடிக்கும் அரசு மக்களுக்கானதாக இருக்க முடியாது. இம்மண்ணின் வளங்களை காப்பாற்றும் அரசாக இருக்க முடியாது.

நான் எடுத்துவைத்திருக்கும் படம் இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம். இந்த திட்டத்தை நான் எதிர்க்காவிட்டால் என் படத்திற்கே துரோகம் செய்வது போலாகிவிடும்.
மண்ணின் வளங்களை பாதிக்காத திட்டங்களை கொண்டுவரும்போது அரசைக் கொண்டாடத்தானே செய்கிறோம்? படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காரணம் மரகதக்காடு படத்தில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் உண்மை. செப்டம்பரில் படம் வெளியாக இருக்கிறது... படம் பார்க்கும்போது அது சொல்லும் செய்தியும் அதன் வலியும் உங்களுக்குப் புரிய வரும் இவ்வாறு இயக்குனர் மங்களேஸ்வரன் கூறியுள்ளார்.

More News

ஹரிஷ்கல்யாண்-ரைசா படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக நடித்த 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து

காவேரி மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வரும் நேரம்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் டேராடூனில் முடிவடைந்ததை அடுத்து இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவர் நடித்த 'கபாலி' மற்றும் 'தெறி' ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து இரண்டு படங்களையும் வெற்றிப்படங்களாக ஆக்கியவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

கருணாநிதியை நேரில் பார்த்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானது

திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து  அறிந்து கொள்வதற்காக ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வந்தார்.

ஜெயம் ரவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்?

விஷால் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.