தமிழ் சினிமாவில் முள்ளை மலராக்கிய ஒரே ஒரு மகேந்திரன்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Saturday,July 25 2020]
மகேந்திரன் என்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான், சினிமா இருக்கும் வரை பேசப்பட்டு கொண்டிருப்பார். அவர் இயக்கிய படங்கள் குறைவு தான் என்றாலும், தமிழ் சினிமா அவரது படங்களை பல்கலைக்கழக பாடங்கள் போல் இன்றும் கொண்டாடி வருகிறது. காலத்தால் அழியாத அவரது படங்கள் பல புதிய இயக்குனர்களுக்கு பாடமாகவே இருந்து வருகிறது. மகேந்திரன் போல் என்னால் படம் எடுக்க முடியாது என்று பிரபல இயக்குனர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்குமே நெருக்கமானவர் மகேந்திரன். இருப்பினும் சிவாஜி படங்களில் மட்டுமே அவர் பணிபுரிந்துள்ளார். நிறைகுடம், தங்கப்பதக்கம் ஆகியவை அவர் சிவாஜியுடன் பணிபுரிந்த படங்கள் ஆகும். தங்கப்பதக்கம் செளத்ரி கேரக்டர் இன்றும் பேசப்படுகிறது என்றால் அதற்கு மகேந்திரன் கொடுத்த உருவம் தான் காரணம்
கமலுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் ரஜினியுடன் தான் மகேந்திரன் பணிபுரிந்துள்ளார். ரஜினியை வெறும் ஸ்டைல் மன்னனாகவே ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் அவரது நடிப்பை முதல் முதலில் வெளியே கொண்டு வந்தது மகேந்திரன் தான். ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் இன்றளவும் ரஜினியின் பெஸ்ட் படங்களில் ஒன்று. அண்ணன் தங்கை பாசத்தை இதைவிட வேறு யாராவது வெளிப்படுத்த முடியுமா? என்பது சந்தேகமே. குறிப்பாக ரஜினியின் ‘காளி’ கேரக்டர் யாராலும் மறக்க முடியாதது. ‘கெட்ட பய சார் இந்த காளி’ என்ற வசனம் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும்
மிகக்குறைந்த வசனங்கள் மட்டுமே பேசப்பட்டாலும் மிகப்பெரிய அளவில் பேச வைத்த திரைப்படம் ‘உதிரிப்பூக்கள்’. இப்படி ஒரு திரைப்படத்தை யாராலும் எடுக்க முடியாது என்று கூறும் அளவுக்கு ஒரு குறிஞ்சிப்பூ தான் இந்த உதிரிப்பூ. கிளைமாக்ஸின் முந்தைய காட்சியில் நாயகியின் தங்கையை அம்மணமாக்கி ‘உனக்கு இதுதான் நான் கொடுக்கும் தண்டனை’ என்று கூறும் சைக்கோ கொடூரம் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது. கிளைமாக்ஸில் விஜயன் கேரக்டர் எடுக்கும் முடிவும் யாருமே எதிர்பாராதது.
கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஜானி’, உருக வைக்கும் கதையம்சம் கொண்ட ‘மெட்டி’, ரஜினியுடன் மீண்டும் இணைந்த ‘கை கொடுக்கும் கை’ஆகியவைகளும் மகேந்திரனால் உருவாக்கப்பட்ட காவியங்கள். இயக்குனராக மட்டுமின்றி ‘தெறி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் தனது நடிப்புத்திறமையையும் வெளிக்காட்டிய மேதை. இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது படங்கள் என்றும் நம்மை விட்டு நீங்காது. இன்றைய அவருடைய பிறந்த நாளில் அவரது அனைத்து படங்களையும் விடாமல் பார்த்து ரசிப்பதே அவரது பிறந்த நாளுக்கு நாம் சொல்லும் வாழ்த்தாகும்.