'கலகத்தலைவன்' டைட்டிலுக்கு இதுதான் அர்த்தம்: மகிழ்திருமேனி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான ’கலகத்தலைவன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’கலகத்தலைவன்’ என்ற டைட்டில் வித்தியாசமாக இருக்கும் நிலையில் இந்த டைட்டில் குறித்து ஏற்கனவே பல பேட்டிகளில் மகிழ்திருமேனி மற்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்கள் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’கலகத்தலைவன்’ என்ற டைட்டிலை இயக்குனர் மகிழ்திருமேனி அறிமுகம் செய்யும் போதே இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பதை அவர் விளக்கிக் கூறியுள்ளார். அது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் கூறியதாவது:

எங்களுடைய அடுத்த படத்திற்கு ’கலகத்தலைவன்’ தலைப்பு வைத்து உள்ளோம். கலகம் என்ற சொல்லுக்கு தமிழில் அதிக அர்த்தம் உள்ளது. 2 பேர்களுக்கு நடுவில் கோல்மூட்டி விடுவதையும் கலகம் என்று தான் கூறுவோம். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று கூட சொல்வார்கள். ஆனால் மாமன்னன் நரசிம்ம வர்மனின் தகப்பனார் மகேந்திரவர்மன் தன்னை கலகப் பிரியர் என்று சொல்லிக் கொள்வார். இந்த இடத்தில் கலகம் என்றால் போர் என்றும் கலகப் பிரியர் என்றால் போரை விரும்புகின்றவர் என்ற அர்த்தமும் உண்டு.

ஆனால் நாங்கள் எடுத்துக்கொண்ட அர்த்தம் என்னவெனில் ரெபல். ரெபல் லீடர் என்ற அர்த்தத்தில் இந்த டைட்டிலை வைத்துள்ளோம். இது ஒரு தனிமனிதன் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து சமுதாயத்தையும் சிஸ்டத்தையும் சீர் செய்யும் கதை அல்ல. இது ஒரு ஆக்ஷன் படம்.

நான் இந்த தலைப்பை உதயநிதி அவர்களிடம் கூறியபோது அவர் சில நிமிடங்கள் யோசித்து, சிஎம் அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே இந்த தலைப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். அதன் பிறகு நான் அவருடைய அனுமதிக்காக காத்து இருந்தபோதுதான் உதயநிதி அவர்கள் போன் செய்து எனக்கு இந்த தலைப்பிற்கு அனுமதி கொடுத்தார். இந்த தலைப்பு எங்களுக்கு அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று மகிழ்திருமேனி கூறியுள்ளார்.