இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அவருடைய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி வழக்கில் ஆறு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கார்த்தி சமந்தா நடித்த ’எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்கு பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து இயக்குனர் லிங்குசாமி ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருந்தார்.

இந்த கடனுக்காக அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டதால் பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லிங்குசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அவர் உறுதி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.