கர்ணன் படத்தில் இத்தனை விஷயம் ஒளிந்து இருக்கிறதா? முன்னணி இயக்குநர் கூறும் வீடியோ விளக்கம்!
- IndiaGlitz, [Thursday,April 15 2021]
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரிசெல்வராஜ் கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான திரைப்படம் “கர்ணன்”. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீசானது. இந்தத் திரைப்படம் ரிலீசாகி ஒருசில தினங்களிலேயே மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசியல் ரீதியாக சில விமர்சனங்களையும் இத்திரைப்படம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பின்னாலும் பல்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்த போராட்டங்கள், ஆதிக்கக் குரல்களின் வன்மம் போன்றவை இடம்பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி இந்தப் படத்தை ஒரு காலக்கட்டத்தின் நிகழ்வு என்று குறுக்காமல் தூத்துக்குடி, நெல்லை போன்ற பகுதிகளில் கடந்த 1990 வாக்கில் நடைபெற்ற சமூக அழுத்தங்களாகவும் அதற்கு எதிர்வினை ஆற்றிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் குரல்களாகவும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது என்ற கருத்தும் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.
அதோடு ஒரு இயக்குநரை ஒரு சில குறியீடுகளுக்குள் அடக்காமல் அவருடைய படைப்பை புரிந்து கொள்ள போதுமான அளவிற்கு மனித நேயம் இருந்தால் மட்டும் போதுமானது என்பது போன்ற விளக்கங்களும் இந்தத் திரைப்படத்தை ஒட்டி முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கர்ணன் படத்தை குறித்து அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென் தமிழகப் பகுதிகளில் நிகழ்ந்த மாற்றங்களையும் இந்தப் படத்தில் பார்க்க முடியும் என்பது போன்ற விளக்கத்தையும் ஒரு சிலர் முன்வைத்து வருகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு இடையில் கர்ணன் திரைப்படத்தை எப்படி புரிந்து கொள்வது? கர்ணன் படத்தில் ஒளிந்து இருக்கும் குறியீட்டு விளக்கங்கள் என்னென்ன? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு முன்னணி இயக்குநர் களஞ்சியம் அவர்கள் விளக்கம் அளித்து சிறப்பு நேர்காணல் கொடுத்து இருக்கிறார். தற்போது கர்ணன் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் மிகையாக விமர்சிக்கப்பட்டு வரும் இத்தருணத்தில் இந்த வீடியோ தனிக்கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.