தமிழ்த்திரையுலகின் பிதாமகன் கே.பாலசந்தரின் 86வது பிறந்த தின சிறப்பு பகிர்வு
Saturday, July 9, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலக இயக்குனர்களின் குரு, இயக்குனர் சிகரம், மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கி சாதனை படைத்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களுக்கு இன்று 86வது பிறந்த நாள். இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும் அவர் விட்டுச்சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பாலசந்தரின் 86வது இந்த இனிய பிறந்த நாளில் அவரை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்.
1930ஆம் ஆண்டு அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த கே.பாலசந்தர் தனது 12வது வயதிலேயே நாடகத்தில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டார். சிறு வயதில் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்தான் அவருடைய விருப்பமான நடிகர். அண்ணாமலை பல்கலையில் பட்டம் பெற்று பள்ளி ஆசிர்யராக பணிபுரிந்தாலும் அவருக்கு அந்த பணியில் முழு ஈடுபாடு இல்லை. அவருடைய ஞாபகம் மொத்தம் நாடகத்தில்தான் இருந்தது. எனவே கடந்த 1950ஆம் ஆண்டு சென்னை வந்து அக்கவுண்ட் பணியில் இருந்து கொண்டே நாடகத்தில் சேர முயற்சி செய்தார். அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 'யூனிடெட் அமேச்சுர்ர் ஆர்ட்டிஸ்ட்' என்ற டிராமா கம்பெனியில் இணைந்து அவர் எழுதிய முதல் நாடகம் 'மேஜர் சந்திரகாந்த். இதில் அறிமுகமான சுந்தர்ராஜன் என்ற நடிகர்தான் பின்னாளில் மேஜர் சுந்தர்ராஜன் என்ற குணசித்திர நடிகராக மாறினார்.
கே.பாலசந்தர் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமாகிய முதல் படம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த 'தெய்வத்தாய்' என்ற படத்தில்தான். இந்த சமயத்தில் கே.பாலசந்தரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பார்த்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து அதற்கான உரிமையை பாலசந்தரிடம் இருந்து பெற்று அவரை இந்த படத்தின் வசனகர்த்தாவாகவும் மாற்றினார். இருப்பினும் இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.பாலசந்தர் இயக்கிய முதல் படம் நாகேஷ், செளகார் ஜானகி நடித்த நீர்க்குமிழி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் நாகேஷ், கால் உடைந்து படுக்கையில் இருக்கும் கால்பந்து வீரர் கோபாலகிருஷ்ணன், அவரை காதலிக்கும் மருத்துவமனை டாக்டர் செளகார் ஜானகி, அந்த காதலை எதிர்க்கும் செளகார் ஜானகியின் தந்தை சுந்தர்ராஜன், என ஒருசில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான இயக்குனராக அவரை இந்த படம் நிருப்பித்தது.
எம்.ஜி.ஆருடன் 'தெய்வத்தாய்' என்ற ஒரே படத்தில் மட்டும் பணிபுரிந்த பாலசந்தர், அதேபோல் சிவாஜிகணேசனுடன் இணைந்து 'எதிரொலி' என்ற படத்தை இயக்கினார். ஏழு கட்டளைகளை வகுத்து அவைகளை எந்த நேரத்திலும் மீறக்கூடாது என்ற கொள்கையுடன் வாழ்ந்து வரும் சிவாஜி, சந்தர்ப்பவசத்தால் அந்த ஏழு கட்டளையும் மீறும் நிலைக்கு வருவதை கே.பாலசந்தர் தனது அபாரமான திரைக்கதையால் இந்த படத்தை இயக்கியிருந்தார். சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜியை அடுத்து அடுத்த தலைமுறை நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் குருவாக மாறியவர் கே.பாலசந்தர்தான். குறிப்பாக இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமானது கே.பாலசந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பாலசந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் பல படங்களில் நடித்துள்ளனர். இந்த மும்மூர்த்திகள் இணைந்த படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாதது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் பாலசந்தர் இயக்கிய 'வறுமையின் நிறம் சிகப்பு', உன்னால் முடியும் தம்பி, புன்னகை மன்னன், ஏக் துஜே கேலியே, ஆகிய படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்க படங்களாக 'தாமரை நெஞ்சம்', 'இரு கோடுகள்', அவள் ஒரு தொடர்கதை', புன்னகை', அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, தண்ணீர் தண்ணீர், கல்கி உள்ளிட்ட படங்கள் சீர்யஸான படங்கள் மட்டுமின்றி சமூகத்தின் அவலங்களை தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் கோபமாக வெளிப்படுத்திய படங்கள்
அதேபோல் பாலசந்தர் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பல படங்கள் இயக்கியுள்ளார். பாமா விஜயம், தில்லுமுல்லு, பூவா தலையா, நவக்கிரகம், பொய்க்கால் குதிரை, ஆகிய படங்கள் சிறந்த நகைச்சுவை படங்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
ஜனரஞ்சக படமான 'நினைத்தாலே இனிக்கும்', குஷ்பு நடிப்பில் அவர் இயக்கிய ஒரே படமான 'ஜாதிமல்லி', நான்கு இளைஞர்களின் தற்கொலை முயற்சியை சொல்லும் 'வானமே எல்லை', ஆகிய படங்கள் பாலசந்தரின் இயக்கத்தில் வந்த சில குறிப்பிட்ட படங்கள் ஆகும்.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் கே.பாலசந்தர் தனது முத்திரையை பதித்துள்ளார். தூர்தஷனில் வெளிவந்த 'ரயில் சினேகம்' என்ற முதல் சீரியலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மர்மதேசம், காசளவு நேசம், சஹானா, அண்ணி உள்பட பல சீர்யல்களை இயக்கியுள்ளார்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, மூன்று பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டம், திரைப்பட கலைஞர்களுக்கு தரப்படும் மிக உயர்ந்த விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது, பல தேசிய மற்றும் பிலிம்பேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் அறிஞர் அண்ணா விருது உள்பட கே.பாலசந்தர் வாங்கிய விருதுகள் ஏராளம்.
கமல்ஹாசனுடன் அறிமுகமானதில் இருந்தே அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த கே.பாலசந்தர் கடைசியாக நடித்த படம் அவருடைய 'உத்தம வில்லன்' படம்தான். இந்த படத்தில் கே.பாலசந்தர் நடித்தாலும் இந்த படத்தை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. இந்த படம் வெளிவரும் முன்னரே அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார்.
பாலசந்தர் நம்மைவிட்டு மறைந்தாலும் அவர் நமக்கு கொடுத்துவிட்டு சென்ற காலத்தால் அழியாத திரைப்படங்கள் நம்மை விட்டு என்றுமே மறையாது என்பது மட்டும் உண்மை. கலையுலக பிதாமகன் கே.பாலசந்தருக்கு இந்த 86வது பிறந்த நாளில் அவருடைய சாதனைகளின் ஒருசிறு பகுதியை பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments