'கில்லி' படத்தை பார்க்க வந்தவர்கள் அளவுக்கு கூட ஓட்டு போட வரவில்லை: இயக்குனர் ஹரி வருத்தம்..!
- IndiaGlitz, [Monday,April 22 2024]
இயக்குனர் ஹரி சமீபத்தில் நெல்லையில் ’ரத்னம்’ படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போது ’கில்லி’ போன்ற திரைப்படங்களுக்கு வந்த ரசிகர்கள் கூட்டத்தின் அளவுக்கு கூட ஓட்டு போட பொதுமக்கள் வரவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.
சமீபத்தில் விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் முதல் நாள் வசூல் புதிய திரைப்படங்களை வசூலை விட அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹரி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது ’கில்லி’ போன்ற படங்கள் ரீரிலீஸ் ஆகும் போது வரும் ரசிகர்கள் கூட்டத்தின் அளவு கூட ஓட்டு போட வரவில்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, முக்கியமான வேலைகள் இருந்து ஓட்டு போட வரவில்லை என்றால் கூட பரவாயில்லை, எதற்காக ஓட்டு போட வேண்டும் என்று நினைத்து மக்கள் வராமல் இருப்பது சரியானது அல்ல என்று தெரிவித்தார்.
வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை, பொதுமக்கள் கண்டிப்பாக அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும், என்னுடைய வாக்கால்தான் முதல்வர், பிரதமரை தேர்வு செய்தேன் என்ற மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஒருவர் வாக்களிக்காமல் இருப்பது டிக்கெட் கிடைக்காமல் தியேட்டர் வாசலில் நிற்பது போல் ஆகிவிடும் என்றும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வீட்டிற்கு திரும்பி தான் செல்ல வேண்டும் அதுபோல் வாக்களிக்கவில்லை என்றால் வெறும் பிரஜையாக தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.