உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூர்யாவின் முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திரையுலகினர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவை வைத்து பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி, ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா என்னும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்’ என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். இயக்குநர் ஹரியின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.