ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்த கட்சி ஆரம்பிக்க வேண்டிய நோக்கம் குறித்து கவுதமன் கூறியபோது, 'மக்களுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் கடந்த சில வருடங்களாக அறவழியில் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். ஆனால் ஆளும் அரசுகள் எங்களது போராட்டங்களை கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமின்றி எங்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

எனவே சிறு அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதை புரிந்து கொண்டு பெரும் படையாக மாறி எங்களை எதிர்ப்பவர்கள் எமனாக இருந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவே இந்த அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்.

அரசியல் என்ற ஆயுதத்தை வைத்து எங்கள் இனத்தை வேரறுத்து வருகின்றனர். எனவே அதே அரசியலை நாங்களும் கையிலெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டோம். எங்கள் கட்சி எங்கள் இனத்தின் எதிரிகளை அப்புறப்படுத்தும்.

கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அடுத்த பத்து ஆண்டுகளில் ஆட்சியை பிடிப்போம்.

இவ்வாறு கவுதமன் கூறியுள்ளார்.