சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட பிரபல இயக்குனர் கைது
- IndiaGlitz, [Thursday,April 13 2017]
தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வித்தியாசமான முறைகளில் தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் ஆதரவு கொடுத்தாலும், கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட மத்திய அரசு இன்னும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சற்று முன் இயக்குனர் கெளதமன் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் சென்னை கத்திபாரா மேம்பாலத்தின் குறுக்கே இரும்புச்சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர்.
சென்னையின் முக்கிய சந்திப்பாக விளங்கி வரும் கத்திப்பாரா மேம்பாலம் பூட்டு போட்டு மறிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சுமூக முடிவு ஏற்படாததால் அதிரடியாக செயல்பட ஆரம்பித்த காவல்துறையினர், சாலையின் மத்தியில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களை பாலத்தின் ஓரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் சுத்தியலால், சங்கிலியில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர்.
இதன் பின்னர் இயக்குநர் கெளதமன் உள்பட போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீராகி வருகிறது.