உங்களுக்கு பொய்யே பேச வராதே! நீங்க எப்படி அரசியலுக்கு? ரஜினிக்கு பிரபல இயக்குனர் கேள்வி
- IndiaGlitz, [Tuesday,May 16 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அரசியல் குறித்து பேசும்போது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு ஏற்படும். இது 1996ஆம் ஆண்டு தேர்தல் முதல் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று ரசிகர்களிடம் உரையாடியபோது, 'கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும் அவ்வாறு அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பேன்' என்று பேசினார்.
ரஜினியின் இந்த அரசியல் வருகை குறித்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாக கூறினாலும் உள்ளுக்குள் அவர் வந்துவிடக்கூடாது என்றே எண்ணுவதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சேரன் ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு குறித்து கூறியபோது, 'வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை. களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?
உங்களுக்கு பொய்யே பேசவராதே. கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது, இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகள் மூடக்கூடாது என சவால்கள் நிறைய. நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். ஏரியா வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.