தமிழக முதல்வருக்கு தாழ்வான வேண்டுகோள் விடுத்த இயக்குனர் சேரன்!
- IndiaGlitz, [Friday,June 04 2021]
சமீபத்தில் தமிழக முதல்வராக பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் சேரன் தாழ்வான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நேற்று முன்னாள் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன்படி தமிழ் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த திட்டத்தை பாராட்டிய சேரன் அவர்கள் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றையும் முதல்வருக்கு விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில் அவர் கூறியிருப்பதாவது:
எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன்.
விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்..
மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார். சேரனின் வேண்டுகோளை நிச்சயம் முதல்வர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டங்கள் சிறப்பு சார்.. எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன் @CMOTamilnadu @mkstalin https://t.co/phARtrGG3w
— Cheran (@directorcheran) June 4, 2021