என் கனவு பாத்திரம் 'மயிலு'க்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி: பாரதிராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய முதல் படமான '16 வயதினிலே' படத்தின் நாயகி ஸ்ரீதேவி இன்று நம்மிடையே இல்லை. இந்த நிலையில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என இரண்டு ஸ்ரீதேவி நடித்த படங்களை இயக்கிய பாரதிராஜா, அவருடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:
சில நிகழ்ச்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கும், சில இழப்புகளை தாங்கவே முடியாது. எனக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே ஸ்ரீதேவியின் இழப்பு தாங்க முடியாத இழப்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை அந்த கிரீடத்தை இறக்காமல் உச்சத்தில் இருந்தவர் ஸ்ரீதேவி. எவ்வளவோ சாதனை புரிந்து இந்த வயதிலும் நடித்து வந்த ஸ்ரீதேவி நடிப்பின் உச்சத்தில் இருந்தது ஆச்சரியம்
நான் என்னுடைய முதல் படமான '16 வயதினிலே' படத்தை இயக்க முடிவு செய்தபோது எனக்கு உண்மையிலேயே 16 வயதில் ஒரு நடிகை தேவைப்பட்டார். நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போதே எங்கள் ஊரில் பார்த்த ஒரு கேரக்டர் மயிலு. என்னுடைய கனவு கேரக்டர் மயிலுக்கு உயிர் தரும் வகையில் ஒரு நடிகையை நான் தேடிக்கொண்டிருந்தபோது ஸ்ரீதேவி நடித்த மலையாள படம் ஒன்றை பார்த்தேன். அவர் தான் என் மயிலு என்பதை அப்போது முடிவு செய்தேன்
நான் அவரை அழைத்தபோது ஒரு நடிகைக்குரிய மேக்கப்புடன் வந்திருந்தார். அப்போது அவரிடம் நான் இந்த கேரக்டருக்கு மேக்கப்பே தேவையில்லை என்று கூறினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார். படம் முடிந்தவுடன் அவர் படப்பிடிப்பு நடந்த இடங்களை பார்த்து கண்ணீர் விட்டார். நான் ஏன் என்று கேட்டபோது, இந்த இடத்தை விட்டு போக எனக்கு மனம் வரவில்லை என்று கூறியதை கேட்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். அவர் எந்த அளவுக்கு அந்த கேரக்டராக வாழ்ந்தார் என்பதை புரிந்து கொண்டேன்.
16 வயதினிலே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தபோதும் நான் ஸ்ரீதேவியைத்தான் பரிந்துரை செய்தேன். இந்தியில் நடிக்க முதலில் ஸ்ரீதேவி தயங்கினார். நான் தான் தைரியம் கொடுத்து அவரை நடிக்க வைத்தேன். இந்திக்கு ஸ்ரீதேவியை நான் தான் அறிமுகம் செய்தேன் என்பது எனக்கு பெருமைதான்.
அடுத்து சிகப்பு ரோஜாக்கள் படத்தை இயக்கியபோது என்னிடம் கதை கேட்காமலே என் மீதிருந்த நம்பிக்கையில் அந்த படத்தில் நடித்து கொடுத்தார். பின்னாளில் அகில இந்திய அளவில் பெரிய ஸ்டார் ஆனதும் அவர் ஒரு பேட்டியில் நான் நடிப்பை பாரதிராஜாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன் என்று கூறியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது
சினிமாவில் மட்டும் தான் அவர் மிகப்பெரிய நடிகை. ஆனால் நிஜவாழ்வில் அவர் மிக எளிமையானவர். நான் மீண்டும் ஸ்ரீதேவியின் தற்போதைய வயதுக்குரிய கேரக்டருடன் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் இந்த துக்க நிகழ்வு நிகழ்ந்துவிட்டது. அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகபெரிய இழப்பு. எனக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே இது பெரிய இழப்பு. இதற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை
ஸ்ரீதேவி போன்ற ஒரு அறிவார்ந்த கலைச்செல்விக்கு இணையாக ஒரு நடிகை இல்லை என்றே சொல்லலாம். பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்காமல் 9 இந்திய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. கடவுள் கொடுத்த பெரிய பரிசு. கலையுலகின் ராணி என்றே அவரை கூறலாம். அவருடைய மறைவு போனிகபூருக்கு மட்டுமின்றி, அவருடைய குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே மிகப்பெரிய இழப்பு.
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவரை ஸ்ரீதேவி என்று நான் சொல்ல மாட்டேன். என் மயில் தான் அவர். மயிலுடைய குழந்தைகள் திரையுலகிற்கு வந்துள்ளனர். அவர்கள் அவருடைய பெயரை காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்
இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா, ஸ்ரீதேவியின் மறைவு குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout