தமிழகத்தை ஆளும் தகுதி தமிழனுக்கு மட்டுமே உண்டு. ரஜினிக்கு பாரதிராஜா மறைமுக எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி தராததால், அவருடைய நிகழ்ச்சியை சட்டவிரோதமாக கருதி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், நான்கு பேர்மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:
'திருமுருகன் என்ன கொலையாளியா, எதற்காக அவர்மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. மத்திய அரசை அவர் விமர்ச்சித்தாராம். ஏன் யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு இருக்கிறது. அதற்காக அவர்மீது குண்டர் சட்டத்தைப் போடுவதா? நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்குப் போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்திருக்கிறேன். அதைப்பற்றி பொதுத்தளத்திலும் பேசியிருக்கிறேன். அதற்காக என்மீதும் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்யுங்கள்.
ஒரு இனத்தை அழிக்க நடந்த முயற்சியை எடுத்துக் கூறவே நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மெரினாவில் கூட்டம் கூடக்கூடாது என்பது சட்டம். ஆனால் என் இனத்தை அழித்த கொடுர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு அடையாளம் தான் அந்த நினைவேந்தல். தமிழ் மொழி, இனம், வீரம் துருப்பிடித்து விட்ட நிலையில் இது போன்ற கூட்டங்கள் அவசியம் தானே
மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது அனைத்தும் முடிந்துவிட்டது. ஒரு மாநிலத்தை ஆளும் தகுதி அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த மண்ணை அயலான் ஆள்வதற்கு உரிமையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும். வேறு எந்த இடத்திலாவது போய் தமிழன் தலைவனாக முடியுமா, அரசியல் செய்ய முடியுமா, ஆட்சியில் உட்கார முடியுமா. மற்ற மாநிலத்தவர்களை அரவணைப்போம். அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது.
தமிழகம் பிரிந்து கிடக்கிறது, வெட்டி குத்திக்கொண்டு கிடக்கிறது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என் பெண்டாட்டிக்கு பிள்ளை இல்லை என்றால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என் பெண்டாட்டிக்கு பிள்ளை ஊனமாக பிறக்கும் என்பதால் நீ வந்து பிள்ளை கொடுப்பாயா. தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும், யார் வேண்டுமானாலும் இங்கு வந்து பணம் சம்பாதிக்கலாம், ஏன் அரசியலுக்குக் கூட வரலாம் ஆனால் தலைமை தமிழனாகத் தான் இருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்ற திடீர் தமிழ்ப்பாசம் ஒருசிலரிடம் தோன்றியுள்ள நிலையில் பாரதிராஜாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் நினைத்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருப்பேன். ஒரு மிகப்பெரிய தலைவர் காமராஜரை ஒரு மாணவன் தோற்கடித்தான். அன்று முதல் அரசியலுக்கு வருவதில்லை என்று முடிவெடுத்தேன். தமிழகத்தின் தலையெழுத்து அன்று தான் மாறியது.
இவ்வாறு பாரதிராஜா ஆவேசமாக பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com