அரசியல்வாதி ஆனாலும் கமல்ஹாசனால் நடிப்பை விட முடியாது: பாரதிராஜா

  • IndiaGlitz, [Thursday,October 12 2017]

கமல்ஹாசன் ஒரு அற்புதமான கலைஞன். சினிமாவுக்காக கையை வெட்ட வேண்டும் என்றாலும் வெட்டி கொள்வார். உலக படங்களை பார்த்து ஏன் நம்மால் இந்த அளவுக்கு படம் எடுக்க முடியவில்லை என்று கோபப்படுவார். சினிமாவுக்காக தன்னை தானே கரைக்கும் ஒரு கலைஞன் கமல். ஒரு படத்தில் ஆதாயம் வருமா? லாபம் வருமா? என்பதை பற்றி யோசிக்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்யும் கலைஞன். இந்தி திரைலகிற்கு போய் மீண்டும் தமிழுக்கு திரும்பிவிட்டார். அங்கேயே இருந்திருந்தால் அவர் இன்று ஆல் இந்தியா ஸ்டார் ஆகியிருப்பார்.

ஒரு கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கிடும் நடிகர். இன்றைய சூழலில் அவரது நடிப்பு ஓவர் ஆக்டிங் போல தெரியும். இருப்பினும் தற்போது அவர் ஓவர் ஆக்டிங்கை குறைத்து கொண்டார். சப்பாணி கேரக்டரை  அவரை தவிர வேறு யாரும் செய்ய முடியாது. கிழிந்த உடையை போட்டு நடிக்க இமேஜ் உள்ள நடிகர்கள் யோசிப்பார்கள். கோவணம் கட்டும் காட்சியில் எந்தவித தயக்கமும் இன்றி நடித்தார்.

கமல் பார்ப்பதற்கு சாஃப்ட் ஆனவராக இருந்தாலும் உள்ளே ஒரு முரட்டுக்குணம் இருக்கும். அவரை சீண்டிவிட்டால் பின்னர் யாராலும் அடக்க முடியாது. ஆனால் நல்ல கலைஞரான கமல், சினிமாவை விட்டுவிடுவேன் என்று கூறுவது வருத்தமாக உள்ளது. அவரை வளர்த்தது, ஆளாக்கியது மட்டுமின்றி அவருடைய சுவாசமே சினிமா தான். எனவே சினிமாவை விட்டு செல்வேன் என்று கூறாமல் சினிமாவில் இருந்து கொண்டே வேறு எதில் வேண்டுமானாலும் அவர் ஈடுபடட்டும். ஆனால் கமலால் நடிக்காமல் இருக்க முடியாது என்பதே எனது நம்பிக்கை. அரசியலில் அவர் பெரிய ஆளாக மாறினாலும் சினிமாவை அவர் விடமாட்டார் என்றே கருதுகிறேன்' என்று பாரதிராஜா கூறினார்.