யதார்த்தப் படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் பாலுமகேந்திரா பிறந்த தினம் இன்று!!!
- IndiaGlitz, [Wednesday,May 20 2020]
அதுவரை இயங்கிவந்த தமிழ்ச் சினிமா உலகை வேறொரு தளத்திற்கு மடைமாற்றிய புதுக் கலைஞன் பாலுமகேந்திரா என்றால் அது மிகையாகாது. ஒளிப்பதிவாளராகத் தொடங்கி இயக்குநர், நடிகர், டப்பிங் கலைஞர் எனப் பல தளங்களில் பயணித்து அனைத்திலும் வெற்றியை ருசித்தவர் பாலுமகேந்திரா. போகிற போக்கில் வாழ்க்கைச் சித்திரங்களை கண்முன்னே காட்டி விட்டு வலியை மட்டும் விட்டு செல்லும் இவரது பாணியால் தமிழ் சினிமா உலகமே புது வழியில் பயணிக்க ஆரம்பித்தது.
மே 20, 1939 இல் இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் ஒரு பேராசிரியருக்கு மகனாகப் பிறந்தவர் தான் பாலுமகேந்திரா. இளங்கலையை முடித்துவிட்டு ஒரு வானொலியிலும் பணியாற்றத் தொடங்கி இருந்தார். அதெல்லாம் எந்த சுவாரசியத்தையுமே தராத நிலையில் ஒருநாள் சினிமா சூட்டிங்கை பார்த்து மிரண்டு போனார். மட்டக்களப்பில் “Bridge of river kwai” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இனி, இதுதான் தனது துறை என முடிவெடுத்து பூனே திரைக் கல்லூரி நோக்கி பயணித்தார். அங்கு 1969 இல் முதுகலைப் பட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வாங்கி தனது கனவுக்கு அஸ்திவாரத்தைப் போட்டார்.
ஒளிப்பதிவளாராக தனது கனவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்த இவர் 1971 இல் நெல்லு என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அறிமுகத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான மாநில விருதினைத் தட்டிச் சென்றார். “சினிமாவின் அடையாளம் வெளிச்சம் என்றால், இருள்தான் அதன் ஆன்மா” என்பது தான் இவரது பாணி. கடைசி வரை இந்த சொற்களுக்கான முழு அர்த்தத்தை எந்த ஒரு சினிமா கலைஞனாலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே இவரின் தனித்த அடையாளம். ஒளிப் பதிவில் பேச ஆரம்பித்த இவரை அனைத்து மொழிகளும் வரவேற்க ஆரம்பித்தன. 1977 இல் கன்னடத்தில் கோகிலா என்ற படத்திலும் தேசிய விருதினைத் தட்டிச் சென்றார். அதே படத்தில் சிறந்த திரைக் கதைக்கான மாநில அரசின் விருதையும் தனதாக்கிக் கொண்டார். இப்படி இவரது உழைப்பு அனைத்தும் விருதுகளாலும் பராட்டுகளாலும் நனைய ஆரம்பித்தது.
முதன் முதலில் முள்ளும் மலரும் என்ற தமிழ் படத்தில் இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அடுத்து 1979 ஆம் ஆண்டு தமிழில் “அழியாத கோலங்கள்” என்ற படத்தில் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்தார். 1980 இல் இவர் இயக்கிய மூடுபனி திரைப்படம் தொடங்கி அவரது கடைசி படமான தலைமுறை வரைக்கும் இளையராஜாவின் இசையோடு கைக்கோர்த்து தமிழ்ச் சினிமாவையே ஒரு புது பாதைக்கு இட்டுச் சென்றார். 1982இல் இவர் இயக்கிய மூன்றாம் பிறை படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் பாலுமகேந்திரா பெற்றிருந்தார். அதே படத்தில் சிறந்த நடிகராக கமல் தேசிய விருதை வாங்கிக் குவித்தார் என்பதும் கூடுதல் சிறப்பு. ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும் புதுக் கலைஞராகவும் மலையாளம், கன்னடம், தமிழ்த் திரையுலகில் அறியப்பட்ட இவர் இந்திய திரையுலகில் தோல்வியையும் சந்தித்தார். மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரிமேக் “சாத்மா” வசூல் படமாகவோ அல்லது பொழுதுபோக்கு படமாகவோ இல்லை என்று இந்தி உலகம் அவரை அங்கீகரிக்க மறுத்தது.
ஆனால் தென்னிந்தியாவில் யதார்த்த கதைகளுக்குப் புது கலைஞனாக இருந்த இவர் பல வெற்றி படிகளை கடந்து வந்தார். 1970 – 76 வரை 15 புதுமையான படைப்புகளை தமிழுக்கு அளித்த சினிமா நாயகனாக இவர் கொண்டாடப்பட்டார். வீடு, சந்தியாராகம், வண்ண வண்ணப் பூக்கள், தலைமுறைகள் என்று இவர் இயக்கிய நான்கு படத்திற்கு 4 தேசிய விருதுகளை வழங்கி அவரது திறமைக்கு இந்த உலகம் பரிசளித்தது. அதோடு மூன்றாம் பிறை படத்திற்கு தேசிய விருதும் கன்னடத்தின் கோகிலா படத்திற்கு ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் என மொத்தம் 6 தேசிய விருதுகளை பெற்றிருந்தார். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குநர் என்ப பல அவதாரங்களை எடுத்து ரசிகர்களது நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் கலைஞராகி 2014 பிப்ரவரி 13 அன்று இந்த உலகை விட்டு மறைந்து போனார்.