'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த வெற்றிப்பட இயக்குனர்! திடீரென ஏற்பட்ட மாற்றம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும், படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதும், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே தமிழ் மற்றும் இந்திய திரை உலகின் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கதைப்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய இரண்டு கேரக்டரில் பிரபு மற்றும் சரத்குமார் நடிப்பதாக இருந்தது என்றும் பிரபுவுக்கு ஜோடியாக நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிரபு, சரத்குமார் ஆகிய இருவருக்கும் வேறு கேரக்டர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கேரக்டர்களில் பாலாஜி சக்திவேல் மற்றும் நிழல்கள் ரவி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் பெரியபழுவேட்டரையர் மனைவியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இந்த படத்தில் வேறு என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.