'இறுதிச்சுற்று' படம் பார்த்து அழுதேன். இயக்குனர் பாலா
- IndiaGlitz, [Saturday,February 06 2016]
சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற 'இறுதிச்சுற்று' திரைப்படம் குறித்து தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் விளையாட்டு சம்பந்தமாக பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படங்களை எல்லாம் பார்த்திருக்கின்றேன். அந்த படங்கள் நன்றாக இருந்ததே தவிர என்னை பெரிதாக பாதிக்கவில்லை.
ஆனால் இறுதிச்சுற்று திரைப்படம் என்னை பல இடங்களில் அழ வைத்துவிட்டது. ஒரு படத்தின் கதை, திரைக்கதை, நடிகர்களின் பெர்மாமன்ஸ், இசை, ஆகிய அனைத்துமே இந்த படத்தில் பெர்ஃபெக்டாக இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். ஒரு படத்தை பார்த்தால் எனக்கு பல குறைகள் கண்ணில் படும். அதிலும் என்னுடைய படத்திலேயே பல குறைகள் கண்டுபிடிப்பேன். ஆனால் இந்த படத்தில் குறைகளே எனக்கு கண்ணில் படவில்லை.
எனக்கு குத்துச்சண்டை என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் இந்த படம் பார்த்து முடித்தவுடன் நான் பல விஷயங்களை புரிந்து கொண்டேன். படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தின் நாயகியின் நடிப்பு முழுவதுமே இயக்குனர் சுதாவின் பிரதிபலிப்புதான்.
இந்த படத்தின் பெரிய பலமே வசனங்கள்தான். அதுவும் தேவையான அளவிற்கு வைக்கப்பட்ட வசனம். ஒருசில காட்சிகளில் வசனமே இல்லாமல் காட்சிகளின் மூலம் இயக்குனர் வசனங்களை புரிய வைத்துள்ளார். இந்த படத்தை பார்க்கும் முன்னர் கண்டிப்பாக இதுவொரு நல்ல படமாக இருக்கும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த அளவுக்கு நல்ல படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.