தமிழ் படத்தில் தான் மலையாள பெண்களை அவமதித்துள்ளார்கள்: பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு
- IndiaGlitz, [Wednesday,April 29 2020]
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதை அடுத்து சீமான், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும், இதனையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழில் , அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், நிபுணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியபோது, ‘உண்மையில் தமிழ் படத்தில் தான் மலையாள பெண்களை அவமதிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாக் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஒருசிலர் ஒன்றுமே இல்லாத தேவையற்ற இந்த சர்ச்சையை உருவாக்கி உள்ளனர். தமிழ் படங்களில் தான் மலையாள பெண்கள் உடை அணிவதை இழிவாக காட்டும் காட்சிகள் அதிகம் உள்ளது. ஒருசில தமிழ் படங்களில் மலையாள நடிகை ஷகீலாவை ஒப்பிட்டு வசனங்கள் உள்ளன. நாய்க்கு பிரபாகரன் என பெயரிப்படுவதால் ஏன் ஒருவர் புண்பட வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. அவர்கள் லாஜிக்படி பார்த்தால், என்ன கொடுமை சரவணா என்ற வசனம் கடவுள் முருகனை கேலி செய்கிறதா?
'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வேண்டுமென்றே பிரபாகரனை தவறாக சித்தரிக்கவில்லை. இந்த பிரச்சனை தேவையற்றது. மலையாளப்படங்களில் அடிக்கடி தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக கூறுவது தவறானது. சமீபத்தில் வெளியான ’கும்பலங்கி நைட்ஸ்’ படத்தில் தமிழ் கதாப்பாத்திரம் கண்ணியமாக காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே தல்கர் சல்மானுக்கு நடிகர் பிரசன்னா உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.