பார்த்திபனின் அடுத்த படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் 'இரவின் நிழல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாசிட்டிவ் வசனங்கள் குவிந்தது என்பது தெரிந்தது.

உலகில் முதல்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் படம் என்ற பெருமைக்குரிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது தெரிந்தது. மேலும் இந்த படம் பல விருதுகளை பெற்று வரும் நிலையில் தேசிய விருது உள்பட இன்னும் சில விருதுகளை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இயக்குனர் பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு விரித்த புத்தகத்தில் மயிலிறகு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அதன் மூலம் தனது அடுத்த படத்தின் டைட்டிலை யூகிப்பவர்களுக்கு புடவை பரிசளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து ’52 ஆம் பக்கம்’ ’புத்தகத்தில் ஒரு மயிலிறகு’ உள்பட பல டைட்டில்களை நெட்டிசன்கள் யூகித்து அனுப்பி வைத்த நிலையில் சற்றுமுன் பார்த்திபன் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டிலே கவிதைத்தனமாக இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இன்பம் பொங்கட்டும்! உங்களின் நல்லாசியுடன் இவ்வாண்டின் முதல் படத்தின் தலைப்பை அடுத்து வெளியிடப்போகிறேன். இந்நிமிடம் வரை அத்தலைப்பை சரியாக கணித்தவர்கள் அப்பதிவை அத்தாட்சியுடன் வெளியிட்டால் புடவை வாழ்த்து! மற்றபடி இப்போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்!