இயக்குனர் ஏ.எல்.விஜய் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சி: திரையுலகினர் இரங்கல்
- IndiaGlitz, [Sunday,July 17 2022]
இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தாயாரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஏ.எல்.அழகப்பன் அவர்களின் மனைவியுமான வள்ளியம்மை என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் ஏ.எல்.விஜய்யின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஏ.எல்.அழகப்பன். இவர் கலகலப்பு, வனமகன் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல் விஜய், அஜித் நடித்த ’கிரீடம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ ’தாண்டவம விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தயாரிப்பாளர் அழகப்பனின் மனைவியும் விஜய்யின் தாயாருமான வள்ளியம்மை இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவாக இருந்த வள்ளியம்மை சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.