10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?
- IndiaGlitz, [Monday,January 03 2022]
தமிழகத்தில் இன்றுமுதல் 15-18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக இந்தக் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் மாணவர்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் இல்லம் தேடி கல்வி மையத்தைத் துவங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்,15-18 வயது உள்ளோருக்கு தடுப்பூசி என்பது மிகவும் முக்கியம். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால் இந்தக் கல்வியாண்டில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மேலும் மாநிலம் முழுவதும் 80,000 இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன எனத் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தத் திட்டத்தை விரிவாக்க இன்னும் கூடுதலாக 1,70,000 மையங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் 2,34,175 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. ஒரேநாளில் இவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.