கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் இப்படி ஒரு திறமையா? வைரல் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் தனது டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவர் எப்போது மீம்ஸ் கிரியேட்டராக மாறினார்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காரணம் கடந்த சில தினங்களாக மீம்ஸ் கிரியேட்டர்கள் மத்தியில் பெர்னி சாண்டர்ஸ் பெரிதும் கவனிக்கப்படும் மனிதராக மாறிவிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிச் சார்பில் போட்டியிடுவதற்கு பெர்னி சாண்டர்ஸ்ஸும் வேட்பாளர் தேர்தலில் கலந்து கொண்டார். ஆனால் அதற்காக நடைபெற்ற பிரைமரி தேர்தலில் இவர் தோல்வியுற்றதால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜோ பிடனுக்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில் ஜோ பிடன் தேர்தலில் வெற்றிப்பெற்று கடந்த 20 ஆம் தேதி அதிபராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.

அதியடுத்து அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழா வாஷிங்டன் டிசியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப்பை தவிர மற்ற முன்னாள் அதிபர்கள் பலரும் வருகை தந்து இருந்தனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பெர்னி சாண்டர்ஸ்ஸும் இவ்விழாவிற்கு வருகை தந்து இருந்தார். மேலும் பதவி ஏற்பு விழாவில் அவர் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பிரவுன் கலர் சுவட்டரும் கையுறையும் அணிந்து இருந்தார். இந்நிலையில் பெர்னி சாண்டர்ஸ்ஸின் பெருந்தன்மையை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் சில நாட்களாக அவரது புகைப்படத்தை இணைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் இவர் கிரிக்கெட் களத்தில் இருப்பது போலவும் நிலவில் உட்கார்ந்து கொண்டு இருப்பது போன்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய பல புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது நம்முடைய இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ்  கார்த்திக் இதேபோன்ற ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அதில் பெர்னி சாண்டர்ஸ் ஒரு ஷோபாவில் அமர்ந்து இருக்கிறார். அவருடன் தினேஷ் கார்த்திக் ஹாயாக அமர்ந்து சிரித்து கொண்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தினேஷ் கார்த்திக்கிடம் இப்படி ஒரு திறமையான என வியந்து வருகின்றனர்.