முயல்களை சைவ முறையில் கும்பிட வேண்டும்- அமைச்சரின் புது விளக்கம்!
- IndiaGlitz, [Thursday,February 25 2021]
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகச் சட்டப்பேரவையில் ஒதுக்கப்பட்ட வினா-விடை நேரத்தின் போது ஒரு கருத்தை கூறி இருக்கிறார். இந்தக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி இருக்கிறது.
இன்று தமிழகச் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நேரத்தின்போது, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். அதில் மேலூர் கிராம மக்கள் திருவிழா காலத்தின்போது முயல்களை வேட்டையாடி சாமி கும்பிட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது கட்டுப்பாடு காரணமாக வேட்டையாடுவதில்லை எனவும் கருவை காடுகளில் உள்ள முயல்களை வேட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் இருந்து முயல்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வனப்பாதுகாப்பே தமிழக அரசின் கொள்கை என்றும் வனவிலங்குகளை கொல்வதற்கு, வதம் செய்வதற்கும் யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டார். மேலும் மக்களை கட்டுப்படுத்தி எதையும் வதம் செய்யாமல் சைவ முறையில் சாமி கும்பிட சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.
அதேபோல மான்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்திரவாதம் அளித்தார்.