துரோகத்திற்கு என்றைக்கும் வெற்றி கிடைத்ததில்லை: எம்.எல்.ஏ பதவியேற்ற பின் தினகரன் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஐம்பது ஆண்டுகால திராவிட கட்சிகளை தனி ஒருவனாக வீழ்த்திய டிடிவி தினகரன் சற்றுமுன்னர் ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்று கொண்டார். தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்து பின்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியின்போது தினகரனின் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக முதன்முதலில் சட்டமன்றத்திற்கு செல்லவுள்ள தினகரன், பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அதிமுகவுக்கு ரத்தமும் சதையும் உயிருமாய் இருக்கின்ற தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு என்றைக்கும் வெற்றி கிடைத்ததில்லை. சசிகலா தலைமையிலான இயக்கமே உண்மையான அதிமுக என ஆர்.கே. நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மனதளவில் பல அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் உள்ளனர். ஒருசிலரின் தவறான எண்ணத்தால் அதிமுகவிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது. தோல்வி பதற்றத்தில் செய்வதறியாது, ஏதேதோ செய்து வருகின்றனர். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும் போது, ஸ்லீப்பர் செல்கள் செயல்படத் தொடங்குவார்கள். அதன் பிறகு ஆட்சி எங்கள் வசம் வரும். வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வரும். அதிமுகவிற்கும், ஆடிட்டர் குருமூர்த்திக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தெரியவில்லை' என்று தினகரன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments