close
Choose your channels

டிஜிட்டல் மாற்றத்தினால் திரையுலகிற்கு உண்மையில் நன்மையா?

Wednesday, February 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக தமிழ்த்திரையுலகிற்கு போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 28% ஜிஎஸ்டி, சினிமா டிக்கெட் உயர்வு, 30% கேளிக்கை வரி, இதுபோதாதென்று பெப்சி வேலைநிறுத்தம், என திரையுலகிற்கு பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் தீர்க்கவே முடியாத பிரச்சனையாக திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைன் பிரச்சனைகளையும் திரையுலகினர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் மார்ச் 1-ந் தேதி முதல் கியூப் கட்டணத்தை குறைக்காத டிஜிட்டல் சேவை வழங்கும் அமைப்பை கண்டித்து புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி ‘ஸ்டிரைக்’ அறிவிக்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் சேவைகளை வழங்கும் அமைப்புகள், தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? என்று தெரியவில்லை. காலவரையற்ற வேலை நிறுத்தம் என்பதால் எத்தனை நாள் இந்த போராட்டம் நீடிக்கும்? என்றும் குழப்பம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்டிரைக் எதற்கு? டிஜிட்டல் சேவைகளை வழங்கும் அமைப்புகளின் சுரண்டல்கள் என்ன? என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு நீண்ட விளக்கத்தினை அளித்துள்ளார். இந்த நீண்ட விளக்கம் இதோ:

திரைப்பட வெளியீடு நிறுத்தம் சம்பந்தமாக பொறுமை/ ஆர்வம் கொண்டவர்களுக்காக என் தனிப்பட்ட நீண்ட கருத்து:

திரையரங்குகள்:
திரையரங்குகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, பார்க்கிங் மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கியதோ அதே போல் புரஜொக்டர் வசதியும் அதனுள்ளயே அடங்கும். பிலிம் புரஜொக்டர்கள் மூலம் படங்கள் ஒளிபரப்பப்பட்ட வரை எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. ஒரு திரையரங்கத்திற்கு டிக்கெட் விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அதனுடன் சேர்த்து விளம்பரம், பார்க்கிங் மற்றும் கேன்டீன் வருவாயும் வந்துகொண்டிருக்கிறது.

Analog Format முறை :
ஒரு படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கும் பொழுது ஒரு ஏரியா உரிமம் வாங்கும் விநியோகஸ்தர் அவர் வெளியிடும் திரையரங்க எண்ணிக்கைக்கு தகுந்தவாறு
பிரிண்ட் காப்பிகள் ( படப்பெட்டி ) வாங்கி வெளியிடுவார். அந்த செலவுகள் விநியோக உரிமத்துடன் கூடுதலாக ஒரு பிரிண்டிற்கு சுமார் ரூ.40000 ஆக இருந்தது. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உள்ள புரிதலில் இந்த செலவு இருவரில் எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் பொதுவாகவும் இருந்து வந்தது. திரையரங்கத்திற்கு படம் உறுதி ஆனவுடன் பெட்டி அனுப்பி வைக்கப்படும். அதை திரையரங்க ஆப்பரேட்டர் திரையரங்கிற்கு சொந்தமான புரஜொக்டரில் படத்தை ஓட்டுவார்.

பிலிம் சார்ந்த செலவுகள் :
இந்த தொழில் ஓரளவு சுமூகமாக நடந்து வந்த ஒரு கட்டத்தில் பிலிம் விலை அதிகரிக்க ஒரு பிரிண்ட் ரூ.50000 -ஐ தாண்ட ஆரம்பித்தது, இதனால் 100 திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட ரூ.50 லட்சம் வரை செல்லானது. மேலும் ஒரு படத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் பிலிம் கேமிராவில் படம்பிடிக்க ( film cost +Negative development ) செலவானது. படம் எடுப்பதும் அதிக முதலீடு கொண்ட ஒரு துறையாக இருந்து வந்தது.

Digital Format அறிமுகம்:
இந்நிலையில் டிஜிட்டல் புரஜொக்சன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு பிலிம் கேமிரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள் பிலிம் நெகட்டிவ்வில் இருந்து டிஜிட்டலாக ஸ்கேன் செய்து மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. டிஜிட்டல் கேமிரா  வந்தவுடன் பிலிம் விலை குறைந்து அனைவரும் டிஜிட்டல் முறையே விரும்ப ஆரம்பித்தனர். இதில் ஒரு பிரிண்டிற்கு வெறும் ரூ.25000 மட்டுமே செல்லானது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சந்தோசமாக டிஜிட்டலை விரும்ப ஆரம்பித்தனர். முற்றிலும் டிஜிட்டல் மயம் ஆனது. திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவு குறைந்து நிறைய தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.

நிற்க!

முன்பு தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் செய்த செலவை விட இன்று குறைவாக தானே செலவாகிறது? டிஜிட்டல் டெக்னாலஜியால் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டும் / வெளியிடப்பட்டும் வருகிறதே?
பின் எதற்கு இந்த போராட்டம்?

பொறுமையுடன் கீழே படியுங்கள். இதில் மறைந்து உள்ள முழு பூசணிக்காயை அடையாளம் காட்டுகிறேன்!

தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் /திரையரங்க உரிமையாளர் ஆகிய இந்த மூன்று வர்க்கத்தினரின் அறியாமை டிஜிட்டல் வசதி வழங்க வந்த சில நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு இந்த 10 வருடத்தில் சுமார் 1500 கோடிகளை முதலீடு செய்தும், 90% திரையரங்குகள் இன்று சொந்த புரஜொக்டர்கள் இல்லாமலும், காலம்காலமாக சம்பாதித்து வந்த விளம்பர வருவாயை இழந்தும் உள்ளனர். இதை திரைத்துறையில் சமீபத்தில் நடந்த ஒரு மிகப்பெரும் ஊழலாகவே நான் பார்க்கிறேன்.

VPF - Visual Projection Fee :

டிஜிட்டல் தான் வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் என்பதால் வெளிநாடுகளில் சோனி போன்ற பன்னாட்டு தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் திரையரங்குகளை டிஜிட்டல் முறைக்கு மாற்ற கூறிய பொழுது ஒரு திரையரங்கத்திற்கு டிஜிட்டல் ப்ரொஜெக்டர் மற்றும் அதன் பிளேயர் அடங்கிய சர்வெர் இவற்றை இன்ஸ்டால் செய்ய சுமார் 20 லட்சம் முதல் 60 லட்சம் வரை செலவானது. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் செலவுகளை குறைக்க நாங்கள் எதற்கு இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என திரையரங்குகள் மறுத்தனர். இந்த சிக்கலை தீர்க்க டிஜிட்டல் உபகரண நிறுவனங்கள் மற்றும் திரை துறையினர் ஒரு வழி கண்டனர். அப்பொழுது உருவானது தான் VPF ( Visual Projection Fee ) முறை. அதாவது இந்த Projector மற்றும் server - ஐ Digital Service Providers நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு ஒரு படத்திற்கு சுமார் ரூ.20000 வீதம் 5 வருடங்களுக்கு படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது எனவும் இந்த equipments + process செலவுகள் மீட்டெடுத்த பின்னர் projector அந்த திரையரங்கத்திற்கு சொந்தம் எனவும், Digital Service Providers அதற்கு பின்னர் வெறும் Service Fee மட்டும் பெற்றுக்கொள்வது எனவும் உலகளாவிய முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முறையில் உலகம் முழுக்க 2018 -க்குப் பின் VPF இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் இங்கு 5 வருடத்திற்கு மேல் ஆன திரையரங்குகளுக்கு ஆங்கில படங்களுக்கு vpf இல்லை. வெறும் service charges மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏமாந்தது வழக்கம் போல் இந்தியர்கள் தான்.

இந்திய திரையுலகம் ஏமாந்த முறை:

இங்கு டிஜிட்டல் மாற்றம் ஆரம்பித்த காலத்தில் ஒரு சில திரையரங்குகள் டிஜிட்டல் புரொஜக்டரை  சொந்தமாக வாங்கினர். திரையரங்குகள் புரொஜக்டர் வாங்க தயக்கம் காட்டிய பொழுது, DSP நிறுவனங்கள் நாங்களே உங்களுக்கு புரொஜக்டர் இலவசமாக தருகிறோம் என்றனர். மேலும் பிரிண்ட் செலவில் பாதி செலவு தான் ஆகும் என்ற பொழுது, அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டால் போதும், கூடவே விளம்பர வருவாயை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றனர். புரொஜக்டர் பணம் வசூல் ஆனவுடன் விளம்பர வருவாயை நாம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. அப்பொழுது விளம்பர வருவாய் அதிகம் இல்லாத காலத்தில் திரையரங்கு உரிமையாளருக்கு அது ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் ஒரு புரொஜக்டர் திரையரங்கில் பொருத்தப்பட்டு அதற்கான முதலீடு VPF மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈட்டப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இன்னும் VPF முன்பை விட அதிகம் கேட்கப்படுகிறது.

தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் , இந்நேரம் புரொஜக்டர் சொந்தம் ஆகி இருக்க வேண்டுமே என கேட்க ஆரம்பித்த பின்னர் தான் அனைவருக்கும் பேரதிர்ச்சியான செய்தி வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் சேவை ஒப்பந்தங்கள் உங்களுக்கு இந்த புரொஜக்டர் எதுவும் சொந்தம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் வேறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் 6 மாதத்தில் இருந்து 1.5 வருடம் முன்பாக இதை தெரிவிக்க வேண்டும், ஒப்பந்தம் முறித்தால் நீங்கள் கையெழுத்திட்ட காலம் முடியும் வரை வருடம் 10 லட்சம் வரை ( E- Cinema projector விலையே வெறும் 6 லட்சம் தான் )எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பன போன்ற கழுத்தை நெறிக்கும் ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்திட்டு இருப்பது வெளிச்சம் ஆகி உள்ளது. நிறைய பேரது ஒப்பந்தங்கள் முடிந்த பொழுது வேறு பழைய / புது ப்ரொஜெக்டர், பல்பு, சவுண்ட் சிஸ்டம் என ஏதாவது ஒன்று இலவசமாக தரப்பட்டு அவர்களிடம் முற்றிலும் ஒருதலைப் பட்சமான ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பல முறை VPF பற்றிய விஷயங்களை பேச முற்படும் போதெல்லாம் அசிங்கப்பட்டதற்கு அவர்கள் போட்டுள்ள இந்த கிடுக்குப்புடி ஒப்பந்தங்கள் தான் காரணம். இந்த ஏமாற்று விஷயங்கள் தெரிந்த சில திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து கேட்ட பொழுதெல்லாம் அவர்களுக்கு தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் VPF அல்லது விளம்பரத்தில் பங்கீடு அதிகமாக தந்தோ, இன்னும் hitech உபகரணங்கள் இலவசமாக தந்தோ வாயடைக்கப் பட்டனர். அதுமட்டும் இல்லாமல் முந்தைய நஷ்டங்களால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதுள்ள கோபத்தினாலும் சில முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் DSP -க்கு எதிராக பேசாமல் மௌனம் காக்கின்றனர். இவர்கள் தவிர்த்து பல திரையரங்கு உரிமையாளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.

ஒரு தொழில்நுட்ப மாற்றம் நடைபெற தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் முதலீடு செய்தது இன்று திரை துறையினர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இரண்டு மணி நேர படம் பார்க்க 20 நிமிடங்கள் விளம்பரம் மக்கள் பார்க்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் விளம்பரம் அவர்கள் படத்துடன் இணைக்கவே காசு கொடுத்து அதுவும் இவர்கள் நினைத்தால் தான் போட முடியும் எனும் கொடூரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விநியோகஸ்தர் சங்கம் இது தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர் பிரச்சினை என்று நினைக்கிறது போலும், நடுநிலை காப்போம் என்று இருக்கிறது.

காலம் காலமாக ஏமாந்து வந்த தயாரிப்பாளர்கள் இனிமேலும் ஏமாற முடியாது எனும் நிலை வருகையில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஒரு வருடத்தில் படம் தயாரிப்பவர்களில் 70%- 80% புது தயாரிப்பாளர்களே, இவர்களில் 90% மேல் மொத்த முதலீட்டையும் இழந்து வெளியேறி விடுகின்றனர். மொத்தம் இழக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு இந்த VPF 3% கண்ணுக்கே புலப்படாத ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் 40 கோடிக்கும் மேல் VPF மூலம் தயாரிப்பாளர்கள் இழக்கின்றனர். திரும்பி படம் எடுக்கவே கஷ்டமான சூழ்நிலையில் இந்த விஷயத்தை பார்க்க தனி தயாரிப்பாளரால் முடியாது. ஆகவே தான் இந்த மொத்த போராட்டமும் தயாரிப்பாளர் சங்கத்தின் தோள்களில் உள்ளது. ஆனால் யார் என்னமோ ஆகட்டும் என் படம் வெளியானால் போதும் என்ற ஒரு தயாரிப்பாளரின் சுயநலம் போதும் அனைத்து தரப்பினரும் வருமான இழப்புகள் சந்திக்க நேரிடும். கடந்த 20 வருடங்களாக தமிழ் திரைதுறை ஒற்றை இலக்க வெற்றி சதவீதத்தை மட்டுமே கொண்டு இயங்கி வந்தாலும் சினிமா மீதுள்ள அதீத பிரியத்தினாலே தான் இந்த துறை இன்னும் தாக்குப் பிடித்து வருகிறது. சுயநலம் மட்டுமே நோக்கமாக இருந்தால் இதற்கு மேலும் இந்த துறை தாங்குமா என்பது சந்தேகமே.

போராடுவதே நம் கடமை ஆகட்டும், அதற்கு…காலம் பதில் சொல்லட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment