ஓடிடி படங்களுக்கும் இனி சென்சாரா? மத்திய அரசு புதிய உத்தரவு!
- IndiaGlitz, [Wednesday,November 11 2020]
கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஓடிடி தளங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு பொழுதுபோக்கும் ஒரு அம்சமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் ஓடிடி தளங்களில் ஒரு சில திரைப்படங்கள் ஆபாசத்தின் உச்சகட்டமாகவும் வன்முறையின் உச்சக் உச்சகட்டமாகவும் இருந்தது. இதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஓடிடியில் உள்ள ஒரு சில படங்களை பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். ஓடிடி தளங்களுக்கு திரைப்படங்களுக்கு இருப்பது போன்று சென்சார் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் சென்சார் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஓடிடி தளங்களுக்கு இருந்தால் மட்டுமே கலாச்சார சீரழிவு ஏற்படாமல் இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டிஜிட்டல் மீடியா கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார் .
இதனை அடுத்து ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் சென்சார் உள்பட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு இருந்தாலும் ஓடிடி தளங்களுக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.