ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிச்சென்ற ஆப்கன் அதிபர்? உருக்கமான விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் தலையெழுத்தே மாறிப்போனது. அதிபராக இருந்த அஷ்ரப் கானி “நாட்டு மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை“ எனக் கூறிவிட்டு இராணுவ ஹெலிகாப்டரில் சில அதிகாரிகளுடன் தப்பிச்சென்றார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கானி 4 கார்கள் நிறைய பணத்துடன் காபூல் விமான நிலையத்திற்கு வந்ததாகவும் தான் கொண்டுவந்த பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிய பின்னரே அங்கிருந்து சென்றதாகவும் ரஷ்ய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டு இருந்தார். மேலும் பணத்துடன் வந்ததால் தஜிகிஸ்தான் அவருக்கு அனுமதி மறுத்ததாகவும் பின்பு ஓமனில் அவர் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியது.
ஆனால் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அதிபருக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்நிலையில் நாட்டு மக்களை இக்கட்டான சூழலில் தவிக்கவிட்டுவிட்டு சென்றது குறித்தும் ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் சென்றதாக விமர்சிக்கப்படுவது குறித்தும் அதிபர் அஷ்ரப் கானி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கிறார்.
அந்த வீடியோவில், “எனது காலனிகளை அணியக்கூட எனக்கு நேரம் இல்லாத நிலையில் நான் எப்படி அவ்வளவு பணத்தைக் கொண்டு வருவேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனது பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தியதோடு உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினர். அதன்பேரில்தான் நான் வெளியேறினேன்.
தாலிபான்களால் ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கவே நான் அங்கிருந்து தப்பி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிபெயர்ந்துள்ளேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும். தாலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க எண்ணினேன்.
தற்போது அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என்று உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments