பண்டைய தமிழ் மன்னர்களின் படையெடுப்புக்கு கடல் ஆமைகள் வழிகாட்டியாக இருந்தனவா? ஆய்வு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரிய பெரிய கப்பல்கள் கடல் பரப்பின் மீது ஊஞ்சால் ஆடிச் செல்வதை பார்ப்பதற்கு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ஆர்வம் காட்டுகிறோம். இன்றைக்கு கடல் வழியாக பயணம் செய்வதற்கு மனிதன் எவ்வளவோ விஞ்ஞான உக்திகளை பயன்படுத்தி வருகிறான். வணிக ரீதியாக மட்டுமல்லாது கடல் என்ற பிரம்மாண்டத்தைப் பார்ப்பதற்காகவும் கடல் பயணம் அனைவராலும் விரும்பப் பட கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.
ஆனால் எந்த ஒரு விஞ்ஞான அறிவும் வளர்ச்சி அடையாத ஒரு காலத்தில் தமிழக மன்னர்கள் எவ்வாறு பல நாடுகளுக்கு படையெடுத்துச் சென்றிருப்பார்கள்? இந்த கேள்வி கண்டிப்பாக ஆச்சரியத்தை வரவழைக்கலாம். ஆனால் பல தமிழக மன்னர்கள் தங்களது ஆட்சி பரப்பினை விரிவு படுத்த தமிழகத்தைத் தாண்டி பல நாடுகளுக்கு கடல் வழியாக பயணம் செய்திருக்கின்றனர். அந்த நாடுகளில் போர் செய்து ஆட்சியையும் பிடித்திருப்பதை நாம் தமிழக வரலாறுகளில் படித்திருக்கிறோம்.
இந்தப் படையெடுப்புகளின் காலம் சுமார் கி.மு 3 இல் இருந்தே தொடங்கி இருப்பதற்கான ஆதாரங்களும் நம்மிடம் இருக்கிறது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தமிழக மன்னர்கள் கடல் வழி பயணங்களுக்கு எந்த மேப்பை பயன்படுத்தி இருப்பார்கள்? கடல் பயணங்களில் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்திருப்பார்கள்? அறிவியல் வளராத காலக் கட்டத்தில் யார் அவர்களுக்கு பருவ காலங்களை கணித்துச் சொல்லி இருப்பார்கள்? போன்ற கேள்விகளை நினைக்கும் போது நமக்கு ஆச்சரியம் தானாக வந்து விடுகிறது. தற்போது கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலுவின் அய்வு இத்தகைய கேள்விகளுக்கு விடை சொல்கிறது.
பண்டைய தமிழர்களின் கடல் பயணங்களுக்கு, கடல் ஆமைகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றன என்பதை தற்போதைய ஆய்வு நிரூபித்துக் காட்டுகிறது. கடல் ஆமைகள் ஒரே இடத்தில் தொடர்ந்து இருப்பதில்லை என்றும் அவை தனது இனப் பெருக்கக் காலத்தில் பல்லாயிரக் கணக்கான கி.மீ. தூரம் பயணம் செய்கிறது என்பதையும் ஒரிசா பாலு தனது ஆய்வில் அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளார். கடல் ஆமைகள் இயல்பிலேயே கூட்டமாக முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை உடையது. ஆமைகளின் இனப் பெருக்கம் என்பது பருவ நிலையை பொறுத்தே அமைகின்றன.
முன்னதாகவே கடல் வாழ் உயிரினங்களில் பெரும்பாலானவை தங்களது இனப் பெருக்கத்திற்காக வெகு தூரம் பயணம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டி உள்ளனர். ஆனால் கடல் ஆமையின் பயணத்தின் மூலம் தமிழர்களின் பண்டைய நாகரிகங்களை கண்டு பிடிக்க முடியும் என்பது தான் தற்போது மிகவும் சுவாரசியமாக விஷயமாக இருக்கிறது.
கடல் ஒரே சமச்சீரான பரப்பினைக் கொண்டிருப்பது இல்லை. அவை ஆழமான மேடு பள்ளங்களால் ஆனது. கடலின் ஆழத்தில் காணப்படுகின்ற நீரோட்டம் அடர்த்தி மற்றும் வெப்பநிலையால் நிகழ்கிறது. இதற்கு மாறாகக் கடலின் மேற்பரப்பு பெரும்பாலான நேரங்களில் காற்றினால் இயங்குகிறது.
கடலின் மேற்பரப்பு காற்றினால் இயங்குகிறது என்பதை பார்க்கும் போதே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடல் ஆமைகள் இனப் பெருக்கம் செய்வதற்காக பல்லாயிரக் கணக்கான மைல் தூரங்கள் பயணிக்கின்றன என்பது தான் இங்கு சுவாரசியமானது. பொதுவாக ஒரு ஆமையால் ஒரு நாளில் சுமார் 85 கி.மீ. தூரம் தான் நீந்த முடியும். ஆனால் இனப் பெருக்கக் காலங்களில் மட்டும் பல்லாயிரக் கணக்கான கி.மீ பயணம் செய்கின்றன. இது எப்படி நடக்கிறது? என்பதைக் கண்டு பிடிப்பதற்காக புதிய தொழில் நுட்பங்களை தனது ஆய்வில் பயன்படுத்தி உள்ளார் பாலு. இதற்காக (RFID-செயற்கைக்கோள் சாதனம்) உதவியுடன் ஆமைகளின் பயணத்தினை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆமைகள் குறுகிய காலத்தில் பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவினை கடல் மேற்பரப்பில் இருந்து கொண்டு நீந்தாமலே கடந்து விடுகிறது என்பதை கண்டுபிடித்தனர்.
Ocean cureents எனப்படும் கடலில் மேற்பரப்பு நீரோட்டம் பருவ காலங்களை பொறுத்து மாறும் இயல்பு உடையது. எனவே ஆமைகள் ஒரு குறிப்பிட்ட பருவ காலங்களில் தான் பயணம் செய்கின்றன. கூட்டம் கூட்டமாக நீந்தி வரும் ஆமைகள் தமிழகம் மற்றும் ஒரிசா பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களில் தஞ்சமடைகின்றன என்பதை பல ஆய்வாளர் இவருக்கு முன்னதாகவே உறுதி செய்திருந்தனர்.
உரிய பருவ காலங்களில் தமிழக மற்றும் ஒரிசா பகுதிகளுக்கு வருகின்ற ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து விட்டு மீண்டும் கடல் வழியாகப் பயணம் செய்து திரும்புவதையும் செயற்கைகோள் உதவியுடன் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆமைகளின் கடல் வழிகளைப் பின் தொடரும் போது இன்னும் சில தகவல்கள் ஆய்வாளர்களுக்கு கிடைத்துள்ளன.
ஆமைகளின் வழித் தடங்கள் ஆய்வாளர்களை மியான்மர்(பர்மா), மலேசியா,
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட்,
ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அழைத்து சென்று இருக்கிறது. ஆமைகளின் வழித் தடங்கள் குறைந்த பட்சம் உலக நாடுகளில் 53 கடற்கரை மற்றும் துறை முகப் பகுதிகளுடன் முடிவடைகிறது. இந்த கடற்கரை மற்றும் துறை முகப் பகுதிகளை கவனித்த ஆராய்ச்சியாளர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
கடல் ஆமைகள் கூட்டிச் சென்ற கடற்கரை மற்றும் துறை முகப் பகுதிகள் நமது பழைய தமிழக மன்னர்களின் படையெடுப்பு, வணிகங்களுடன் தொடர்புடைய பகுதி என்பதை ஒருவாறு ஆய்வாளர்கள் ஊகித்தனர். எனவே உறுதியாக பண்டை தமிழக மன்னர்கள் தங்களின் கடல் வழி பயணங்களுக்கு கடல் ஆமைகளை நம்பி இருக்கலாம் என்றும், ஆமைகளின் உதவியுடன் தங்களது படையெடுப்புகளையும் வணிக காரியங்களையும் செய்திருக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
வெறுமனே ஆமையின் வழித்தடங்கள் மட்டுமல்லாது 53 கடற்கரை மற்றும் துறை முகப் பகுதிகளின் நாகரிகங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏனெனில் அந்த கடற்கரை பகுதிகளின் பெயர்கள் பெரும்பாலும் தமிழோடு ஒத்திருந்தது என்பது தான் மிகவும் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது.
ஆமைகளின் வழித்தடத்தின் கண்டுபிடிக்கப் பட்ட கடற்கரை நகரங்களின் பெயர்கள் : தமிழா- மியான்மர், சபா சந்தகன் – மலேசியா, குமரா – ஆஸ்திரேலியா, கடாலன் – ஸ்பெயின், குமரி – பசிபிக் கடல், கோமுட்டி – ஆப்பிரிக்கா எனப் பெரும்பாலும் தமிழ்ச் சொல்லாகவே இருந்தன. அதோடு அங்கு வசிக்கும் சில பழங்குடி மக்களின் நாகரிகம் மற்றும் பண்பாடு போன்றவை தமிழ் நாகரிகத்தோடு பொருந்தி வருகின்றன என்பது இன்னும் ஆய்வாளர்களின் கருத்துக்கு வலு சேர்த்துள்ளது.
இன்றைக்கும் கடல் பயணங்களை மேற்கொள்ளும் பெரும்பாலான மீனவர்கள் பசியை ஆற்றிக் கொள்வதற்கு சக்கரை வள்ளிக் கிழங்கனையே (sweet potato) பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். நாம் பழையத் தமிழ்ச் சொல்லில் சக்கரை வள்ளிக் கிழங்கினை (குமரா) என்று பயன்படுத்தி உள்ளோம். கடல் ஆமைகளின் வழித்தடங்களில் கண்டுபிடிக்கப் பட்ட 53 கடற்கரை துறைமுகங்களில் உள்ள மக்கள் வாழ்வில் இந்த சக்கரை வள்ளிக் கிழங்கு (sweet potato) மிகவும் முக்கியத்துவம் உடைய உணவாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. அதாடு குமரா என்ற பழைய தமிழ் சொல்லையே பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
செயற்கை கோளின் உதவியுடன் கண்டு பிடிக்கப் பட்ட ஆமைகளின் வழித்தடங்கள், உணவு, நாகரிகம், மொழி, இடங்களின் பெயர், பண்பாடு போன்ற பல கூறுகள் பண்டையத் தமிழர்கள் 53 நகரங்களுடன் மிகவும் நேரடியாக தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் பண்டையத் தமிழ் மன்னர்கள் கடல் ஆமைகளின் வழித் தடங்களை ஒருங்கிணைத்தே தங்களது பயணங்களுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் முடிவுக்கு வருகின்றனர்.
கடல் பயணங்களில், கடல் ஆமைகள் வழிகாட்டியாக (Navigators) இருந்தன என்ற முடிவு இங்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்தகைய ஆய்வுகள் தமிழர்களின் வரலாற்றையும் புகழையும் இன்னும் ஓர்படி மேலே எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேக இல்லை எனலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com