ஜெயலலிதா இறக்கும் முன்னரே இரங்கல் தெரிவித்தாரா மோடி?
- IndiaGlitz, [Thursday,December 08 2016]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள் அன்று இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாட்ஸ் அப் உள்பட பல சமூக வலைத்தளங்களில் மோடி 11 மணிக்கே ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாக டுவிட்டர் ஸ்க்ரீன்ஷாட் உடன் ஒரு செய்தி பரவி வருகிறது. ஜெயலலிதா இறக்கவிருப்பது மோடிக்கு முன்பே எப்படி தெரிந்தது என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். இதேபோல்தான் கடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோதே ஜெயலலிதாவுக்கு மோடி வாழ்த்து கூறியதாகவும் செய்தி வெளிவந்தது. இது எதனால் வருகிறது என்பதை தற்போது பார்ப்போம்
உண்மையில் டுவிட்டரில் மோடி எத்தனை மணிக்கு ஒரு பதிவை போட்டிருந்தாலும், அந்த டுவிட்டை பார்ப்பவர்கள் எந்த நாட்டில் இருக்கின்றார்களோ அந்த நாட்டின் நேரம்தான் காண்பிக்கும். உதாரணமாக மோடி ஒரு டுவீட்டை 11.30 மணிக்கு பதிவு செய்தார் என்றால் நீங்கள் துபாய் அல்லது அரபு நாடுகளில் இருந்தால் உங்கள் மொபைல் அல்லது கணிணியில் ஒன்றரை மணிநேரம் முன்கூட்டியே காட்டும். அதை வைத்து கொண்டு மோடி ஒன்றரை மணி நேரத்திற்கு முன் டுவீட் செய்தார் என்று முடிவு செய்யக்கூடாது. அரபு நாடுகளில் இருந்தாலும் இந்திய நேரத்தை உங்களுடைய மொபைல் அல்லது கணிணியில் செட் செய்தால் இந்த வித்தியாசம் இருக்காது. குழப்பமும் ஏற்படாது.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து ஒருவர் எடுத்த டுவிட்டர் ஸ்க்ரீன்ஷாட்தான் வைரலாக பரவி மோடி முன்பே டுவீட் செய்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இது தற்செயலாக நடந்ததா? அல்லது வைரலாக வேண்டும் என்பதற்காகவே வதந்தி பரப்பப்பட்டதா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்